அரசியலில் குதிக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்

இந்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அரசியலுக்குள் வரும் முக்கிய நடிகராக பிரகாஷ்ராஜ் இருக்கிறார். ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கிவிட்டநிலையில், இப்போது பிரகாஷ்ராஜும் களமிறங்கியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ், பாஜகவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டவர் என்று தன்னை வெளிப்படுத்தி வருகிறார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜவுக்கு எதிராகவும், தீவிர இந்துத்துவாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவ்வப்போது நடிகர் பிரகாஷ்ராஜ் தனது கருத்துகளை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வந்தார்.

குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்பும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட பிறகும் பாஜகவையும், பிரதமர் மோடியையும் எதிர்க்கும் தனது மனப்போக்கைத் தீவிரப்படுத்தினார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரகாஷ் ராஜ் கூறுகையில், “ நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை. நான் மோடிக்கு எதிரானவன், ஹெக்டேவுக்கு எதிரானவன், அமித் ஷாவுக்கு எதிரானவன், என்னைப் பொறுத்தவரை அவர்கள் இந்துக்கள் இல்லை” எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாஜகவினர் பசு மாடுகள் குறித்த விஷயத்தைப் பெரிதாக்கி வந்த நிலையில், பசு சாணம், கோமியம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரகாஷ்ராஜ் கருத்துகளை முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையாகி நீதிமன்றத்தில் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு தொடர்பட்டது. மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கும் வகையில் #ஜஸ்ட் ஆஸ்கிங் என்ற ஹேஷ்டேக்கில் கேள்விகளைப் பதிவிட்டு வருகிறார்.

Related posts