டென்மார்க் மகாராணியார் மாகிரதவின் புத்தாண்டு உரை சொல்வதென்ன..

வழமையாகவே உலகத்தின் தலைவர்களுடைய புத்தாண்டு செய்திகளை எடுத்துக் கொண்டால் டென்மார்க் மகாராணியார் மாகிரதவின் உரை ஜீவனுள்ள உரையாகவும், திரும்பி ஒரு தடவை படிக்க வேண்டிய உரையாகவும் இருக்கும்.

அதுபோலவே இந்த ஆண்டும் உலகத் தலைவர்களின் புத்தாண்டு உரைகளில் டேனிஸ் மகாராணியாரின் உரையும், பிரான்சிய அதிபர் எமானுவல் மக்ரொங்கின் உரையும் கூடுதலாக ஊடகங்களில் முன்னுரிமை பிடித்துள்ளன.

நாம் வாழும் டென்மார்க் நாடு என்பதற்காக அல்ல.. அவருடைய உரையின் சாராம்சம் உண்மையாகவே மக்கள் கவனத்தை தொட்டிருந்ததை மறுக்க முடியவில்லை.

அந்தவகையில் அவர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு சொன்ன கருத்துக்கள், டென்மார்க் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல உலகப் பிள்ளைகள் அனைவருக்குமே பயனுள்ளதாக அமைந்தது.

பிள்ளைகளே நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறோம் என்பது முக்கியமல்ல..

நீங்கள் எந்த இலக்கை தொட்டீர்கள் என்பது முக்கியமல்ல..

இவை எல்லாவற்றையும் விட நீங்கள் யார் என்பதை இந்த உலகிற்கு அடையாளப்படுத்துவதே முக்கியம்..!

நீங்கள் எதையாவது செய்ய முயலும்போது சுயநலமாக சிந்திக்க வேண்டாம். உங்கள் நண்பர்களையும், இந்த சமுதாயத்தையும் மதித்து நடக்கிறீர்களா என்று எண்ணிச் செயற்படுங்கள்.

அதிகமான நேரத்தை சமூக வலைத்தளங்களிலும் ஆன் லைனிலும் இருந்து இழந்து, தனிமைப்பட்டு சுயநல வாழ்வு வாழ்தல் கூடாது.

ஒரு காலமும் உங்களுக்கான சமுதாயக் கடமையை தட்டிக்கழித்தல் கூடாது. ஒவ்வொருவருக்கும் சமுதாய பொறுப்பு வேண்டும்.

உன் செயல் உனக்கும், எனக்கும், மற்றவருக்கும் சரிதானா என்று ஒப்பிட்டுப் பார்த்து நடக்க வேண்டும்.

சைபர் தாக்குதல்கள், பருவநிலை சீரழிவு போன்றவற்றால் இயற்கையின் சமநிலை சீர் குலைந்துள்ளது. அதை காப்பாற்ற போராட வேண்டும் என்ற கருத்துக்களை அவர் உரை கொண்டிருந்தது.

பயனுள்ளதோர் உரையை இந்த ஆண்டும் அவர் ஆற்றியிருக்கிறார்.

அலைகள் 01.01.2019

Related posts