விஷாலுக்கு கல்யாணம் ஆந்திர அனிஷாவை மணக்கிறார்

விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

நடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் விஷால். ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி’, ‘தாமிரபரணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார்.

மேலும், தயாரிப்பாளராகவும் மாறி ‘பாண்டியநாடு’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, “நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன். லட்சுமிகரமான பெண்ணைத் தான் திருமணம் செய்யவுள்ளேன்” என்று தெரிவித்து வந்தார் விஷால். நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் எனத் தெரிகிறது.

இதனால், விஷாலுக்குப் பெண் பார்க்கும் பணிகளில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை விஷாலுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஹைதராபாத்தில் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அன்றைய தினமே திருமணத் தேதியையும் முடிவு செய்யவுள்ளனர்.

Related posts