ஒரே நாளில் வெளியீடு: ஜனவரி 10-ல் ‘பேட்ட’ vs ‘விஸ்வாசம்’

ஜனவரி 10-ம் தேதி ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்துள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ மற்றும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் தங்களுடைய பொங்கல் வெளியீட்டை உறுதி செய்தன.

இரண்டில் எந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி, எது ஜனவரி 14-ம் தேதி என்ற குழப்பம் நீண்ட நாட்களாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் இருந்தது. ஓரிரு நாட்கள் தள்ளி வந்தாலும், மற்றொரு படத்துக்கு திரையரங்குகள் குறைக்கும் சூழல் வரலாம், இதனால் பிரச்சினைகள் எழலாம் என்று கருதியிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இதனால், இரண்டு படங்களின் விநியோகஸ்தர்களிடமுமே ஒரே நாளில் வந்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளனர். எந்த தேதியில் வெளியீடு என்பதிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இறுதியாக, ஜனவரி 10-ம் தேதி வரலாம் என்று பேசி முடித்து, உறுதி செய்துள்ளனர்.

‘விஸ்வாசம்’ உரிமையைக் கைப்பற்றியுள்ள கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், ‘பேட்ட’ உரிமையைக் கைப்பற்றியுள்ள ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் படுஜோராக திரையரங்குகள் ஒப்பந்தத்தைத் தொடங்கியுள்ளன. எந்தப் படத்துக்கு அதிகப்படியான திரையரங்குகள் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

Related posts