16 வயது குறைந்த காதலனை கரம்பிடிக்கிறார் சுஷ்மிதா சென்

1994ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, தமிழில் பிரவீன்காந்த் இயக்கத்தில் நாகார்ஜூனா ஜோடியாக ரட்சகன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், சுஷ்மிதா சென். பிறகு இந்தியில் கவனம் செலுத்திய அவர், மீண்டும் தமிழுக்கு வந்து, ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில், ‘ஷக்கலக்க பேபி… ஷக்கலக்க பேபி… லுக்குவிட தோணலையா’ என்ற பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடனம் ஆடினார். தற்போது 43 வயது ஆகும் அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.

எனினும் ரெனீ, அலிஷா ஆகிய பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சில மாதங்களாக பாலிவுட் பிரபலம் ரோஹ்மேன் ஷாவல் என்பவருடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செய்கிறார். இரண்டுபேரும் அவ்வப்போது பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளில் ஜோடியாக பங்கேற்று வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. சமீபத்தில் தனது காதலை ரோஹ்மேன் சொன்ன மறுநிமிடம் அதை சுஷ்மிதா சென்னும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து இந்த ஜோடி இல்லற வாழ்வில் இணைய முடிவு செய்துள்ளனர். சுஷ்மிதா சென் தத்தெடுத்த பெண் குழந்தைகளுக்கும் ரோஹ்மேனை பிடித்துவிட்ட காரணத்தால், அவர்கள் சுஷ்மிதா சென், ரோஹ்மேன் காதல் திருமணத்துக்கு முழு சம்மதம் தெரிவித்துள்ளனர். கடந்த தீபாவளி பண்டிகையை ரோஹ்மேனுடன் இணைந்து சுஷ்மிதா சென்னும், அவரது மகள்களும் கொண்டாடினர்.

43 வயது ஆகும் சுஷ்மிதா சென், 27 வயது இளைஞனை, அதாவது தன்னைவிட 16 வயது குறைந்த ரோஹ்மேனை திருமணம் செய்கிறார். சமீபத்தில் முன்னாள் உலக அழகியும், தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தனது 36 வயதில், தன்னைவிட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts