ரூ.253 கோடி குவித்த சல்மான் கான்

இந்த ஆண்டு இந்தியாவிலேயே அதிகம் சம்பாதித்த சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் 100 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை ரூ.253.25 கோடி சம்பாதித்து இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சி, விளம்பர படங்கள் மூலம் அவர் இதை சம்பாதித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி இருக்கிறார். அவர் ரூ.228 கோடி சம்பாதித்துள்ளார்.

ரூ.185 கோடி சம்பாதித்த இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் மூன்றாம் இடத்தில் உள்ளார். கடந்த முறை இரண்டாம் இடத்தில் இருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இந்த ஆண்டு 13வது இடத்துக்கு சென்றுள்ளார். அவர் ரூ.56 கோடி மட்டும் சம்பாதித்துள்ளார். அவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 5வது இடத்தில் இருக்கும் டோனி, ரூ.101.77 கோடியும் 9வது இடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் ரூ.80 கோடியும் குவித்துள்ளனர்.

ஆமிர்கான் ரூ.97 கோடியுடன் 6வது இடத்தில் இருக்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ.66.75 கோடியுடன் 11 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நடிகைகள் உள்பட 18 பெண் பிரபலங்களும் இந்த பட்டியலில் உள்ளனர். ரூ.112 கோடியுடன் 4வது இடத்தில் தீபிகா படுகோன் இருக்கிறார். கடந்த ஆண்டு ரூ.68 கோடி சம்பாதித்த பிரியங்கா சோப்ரா 7வது இடத்தில் இருந்தார். இந்தமுறை ரூ.18 கோடியுடன் 49 இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் புதிதாக இணைந்தவர்கள் வரிசையில் மம்மூட்டி, விஜய் தேவரகொண்டா, தெலுங்கு பட இயக்குனர் கொர்டாலா சிவா ஆகியோரும் உள்ளனர்.

Related posts