தங்கச் சங்கிலியை திருடி தப்பியோட்டம் யாழில்

கைத்தொலைபேசி மீள் நிரப்பு அட்டையை கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து வர்த்தக நிலைய உரிமையாளரின் தாயின் 3 பவுண் சங்கிலியை இரு இளைஞர்கள் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.

யாழ்.பிரதான வீதியில் தண்ணீர் தாங்கிக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலையே நேற்று(26) இரவு 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வர்த்தக நிலையத்தில் கடை உரிமையாளர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அவருடைய தாயார் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக கதிரையில் அமர்ந்திருந்துள்ளார்.

அந்நேரம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிள் இயங்கு நிலையில் காத்திருக்க மற்றையவர் இறங்கி வர்த்தக நிலையத்திற்குள் சென்று கைத்தொலைபேசி மீள் நிரப்பு அட்டையை கொள்வனவு செய்துள்ளார்.

அதன் பின்னர் வர்த்தக நிலையத்தை விட்டு வெளியேறும் போது, வெளியில் கதிரையில் அமர்ந்திருந்த வர்த்தகரின் தாயாரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு வெளியில் தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுள்ளார்.

கொள்ளையர்கள் இருவரையும் வர்த்தகர் மடக்கி பிடிக்க முற்பட்ட போதும் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Related posts