ரியூப் தமிழ் கொண்டாட்டம் பத்திரிகை வெளியீடு பத்து ரூபா

ரியூப் தமிழின் கொண்டாட்டம் பத்திரிகையின் நத்தார் சிறப்பிதழ் நேற்று முன்தினம் வெளியானது.

பல்வேறு சுவைமிகு தகவல்களையும் கொண்டு தாயக இளையோரால் வெளியிடப்படும் பத்திரிகையாக இது இருக்கிறது.

இன்று தாயகத்தில் பல்வேறு வகைப்பட்ட இளைஞர் குழுவினரை காண்கிறோம். ஒரு குழு வாழ போராடிக்கொண்டிருக்கிறது. இன்னொன்று வாழ்க்கையையே தானே தன் வாழ்க்கையை போராட்டக்களமாக்கிக் கொண்டிருக்கிறது.

முதலாவது பிரிவுக்கு ஆதரவில்லை..! இரண்டாவது பிரிவுக்கு வெளிநாட்டு உறவுகளால் அளவுக்கு மிஞ்சிய ஆதரவு கூடிவிட்டது.

இப்போது வடக்கின் ஆதரவற்ற இளைஞர்கள் இணைந்து வெளியிட்டுள்ள பத்திரிகைதான் ரியூப்தமிழ் கொண்டாட்டமாகும்.

மக்களுக்கு மீனை கொடுக்க வேண்டாம் தூண்டிலை கொடுங்கள் அவர்கள் மீன் பிடிக்கட்டும் என்ற கொள்கைக்கமைய ரியூப் தமிழ் ஆதரவில் வரும் இளைஞர்களின் அணி தற்போது புத்தெழுச்சி பெற்று வருவதின் அடையாளமே அவர்கள் தங்கள் சுய சிந்தனையில் உருவாக்கும் இது போன்ற பத்திரிகைகளாகும்.

இதுவரை காலமும் பத்திரிகைகளை அடிவருடிகளும், ஆளவந்தார்களும் தமது கையில் வைத்திருந்து வண்டியோட்டி வந்தார்கள். ஆனால் இன்று தொழில் நுட்பத்தின் வரவால் ஊடகங்கள் ஏழைகளின் கைகளுக்கு மாறி வருகிறது.

இந்த இளையோர் வெளியிடும் பத்திரிகைகளின் உள்ளடக்கங்கள் மற்றைய பத்திரிகைகளில் பார்க்க முடியாத தகவல்களை உள்ளடக்கியுள்ளன. பணத்திற்கு சமரசம் கண்டு சமுதாயத்தை மந்தைகளாக வைத்திருக்க ஒப்புக்கொண்டு, சோரம் போன பார்ப்பனிய போக்கு ஊடகங்களின் வீழ்ச்சி சமூக வலைத்தளங்களின் வருகையின் பின் ஏற்பட்டது தெரிந்ததே. இது இந்தியாவிலும் இப்போது அரும்புகிறது.

இந்த போக்கிற்கு தற்போதய தாயகமும் விதிவிலக்கல்ல, அங்கிருந்து வரும் மரபுநிலை பத்திரிகைகளின் உள்ளடக்கத்தை மாற்றி புதிதாக சிந்திக்க இவர்களால் முடியுமா..? என்ற கேள்விக்கான பதில் இனி இனித்தான் வர வேண்டும்.

அதேவேளை வடக்கு இளைஞர்களின் அறிவு, சிந்தனையின் விஸ்த்தாரம், பரந்த ஞானம், யூனிக்கான சிந்தனை இவைகளை ஆய்வு செய்யவும் வேண்டியுள்ளது. இதற்கு பத்திரிகைகளும் படைப்பிலக்கியங்களும் தொடர்ந்து வரவேண்டியது அவசியமாகும்.

அப்போதுதான் நம்மால் தாயக உண்மை நிலையை மதிப்பிட முடியும். இவற்றை மக்கள் வாங்குகிறார்கள், படிக்கிறார்கள். பத்து ரூபாவில் பக்காவாக செயற்படுகிறோம் என்று கூறுகிறார்கள் இந்த இளைஞர்கள்.

வரும் காலங்களில் இவைகளையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் :

உதாரணமாக வடக்கு மாகாணத்தில் அனைத்து பணிகளும் காலதாமதமாகவே உள்ளன. எந்த முயற்சியை எடுத்தாலும் குறித்த நேரத்தில் செய்ய முடியாது. காரியாலயங்கள் தூங்கி வழிகின்றன.

முதலமைச்சரின் செயலாளரே புளித்தகீரையாக இருப்பதாக வெளிநாடுகளில் இருந்து போவோர் கூறுகிறார்கள். காரியாலயம் போன புலம் பெயர் தமிழர் ஒருவர் தான் வந்திருக்கும் தொலைவு பற்றி எதுவும் தெரியாது விரட்டும் இந்த நபர், சிங்கள ஊழியர் வந்தால் கொஞ்சிக்குலவி அடிமையாவது அவலத்திலும் பேரவலமாக இருக்கிறது என்கிறார். உண்மையா தெரியவில்லை.

ஆனால் முதல்வர் காரியாலயம் மட்டுமல்ல இப்படியான களிம்பேறிய லோட்டாக்கள் யாழ்ப்பாணத்தின் அரச காரியாலயங்களில் எல்லாம் நிறைந்து வழிகின்றன என்பது மட்டும் உண்மை.

இவர்கள் பொறுப்புணர்ச்சி இல்லாமல், எதையுமே நேரத்திற்கு செய்யாதிருப்பது போரின் அவலம் என்று சிலர் போலி நியாயம் கூறுகிறார்கள்.

ஆனால் அது உண்மையல்ல..

சமீபத்தில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு யாழ்ப்பாணத்தின் சோத்துக்கடைகளில் எல்லாம் ஒரு மணிக்கே சோறு தீர்ந்துவிடுகிறது என்கிறது.

எப்படி சோத்துக்கடைகளுக்கு மட்டும் நேரத்திற்கு வருகிறார்கள்..? எதற்குமே நேரத்திற்கு வராத இவர்கள் சோத்துக்கடைகளுக்கு மட்டும் வருகிறார்கள்..?

புலம் பெயர் தமிழர் தத்தமது குடும்பத்தினருக்கு வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிள்கள் சோத்துக்கடைகளுக்கு மட்டும் டாண் என்று வந்துவிடுகின்றனவே எவ்வாறு..?

புலம் பெயர் தமிழருக்கு இடித்துரைக்க யாரும் இல்லை.

எல்லாமே தாமதமானால் இவர்கள் சோத்துக்கடைக்கும் தாமதமாக அல்லவா வரவேண்டும் என்கிறார் இதுபற்றி சுயமாக ஆய்வு செய்த இளைஞர்.

இப்படி வடக்கே உள்ளன பல பக்கங்கள்.. இவை உண்மையா தெரியவில்லை.. கண்டறிய வேண்டியது ஊடகங்களின் கடமை. புலம் பெயர் நாடுகளில் உள்ள ஊடகங்களில் தாயகம் என்றால் பாலும் தேனும் ஓடும் என்று கூறியவர்கள் இப்போது ஓடிவிட்டார்கள். அவர்கள் பொய்யர்கள் என்பது தெரிந்துவிட்டது.

அப்படியானால் உண்மை என்ன..?

அதை அனைவரும் அறிய வேண்டும். ஆகவே வடக்கு இளைஞர்கள் இன்றைய வடக்கின் இருட் பக்கங்களையும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

அப்படியொரு நாள் வருமா.. வந்தால் மட்டுமே புலம் பெயர் தமிழரின் மூளை வெளிக்கும். இவை இந்தப் பத்திரிகையை பார்த்ததும் நமது உள்ளத்தில் ஏற்பட்ட கேள்விகள்.

இராணுவம், போலீஸ் என்பனவும் கடமையை சரிவர செய்கின்றனவா..? கேள்வி உண்டு..

அலைகள் 26.12.2018

Related posts