தீர்வு சொல்லாமல் மூடியது அமெரிக்க செனட் இதனால் பொருளாதார ஸ்தம்பிதம்

அமெரிக்க செனட்டில் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக, சகல பிரச்சனைகளுக்கும் நத்தாருக்கு பின்னர் தீhவு காணலாமென செனட் மூடப்பட்டுவிட்டது.

இதில் முக்கியமான பிரச்சனை அமெரிக்க அதிபரின் மெக்சிக்கோவை ஊடறுத்து கட்டப்படவுள்ள சுவருக்கான நிதியை ஒதுக்குவதாகும். சுவர் அமைப்பதற்கான அத்திவாரத்தை போடுவதற்காக அவர் செனட்டிடம் 500 கோடி டாலர்களை ஒதுக்கும்படி கேட்டிருந்தார்.

ஆனால் செனட்டோ அதற்கு இணங்கவில்லை, முடிவு காணாமல் சென்றுவிட்டார்கள். காரணம் புத்தாண்டு வர செனட்டில் அதிபருடைய கட்சிக்கிருந்த பெரும்பான்மை குறைந்து எதிரணியான டெமக்கிரட் கட்சி பெரும்பான்மை பெறுகிறது. இதனால் இப்போது தீர்மானம் எடுக்க முடியாது என்பது தெரிந்ததே.

இது இவ்விதமிருக்க 2019ம் ஆண்டுக்கான அமெரிக்க பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க அமெரிக்க காங்கிரஸ் மறுத்திருக்கிறது. இதனால் கடந்த வெள்ளி முதல் பொதுத்துறைக்கான சம்பளத்தை வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

செனட்டில் அதிபருடைய கட்சி பெரும்பான்மையை இழந்ததுள்ளமை, ஈற்றில் அவருடைய பதவிக்கு ஒரு சவாலாக மாற வாய்ப்புண்டு என்கிறார்கள் நிபுணர்கள். அடுத்த ஆண்டு நத்தார்வரைகூட அவர் பதவி தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது.

காரணம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு குறித்த றொபேட் மூலர் அறிக்கை அடுத்த ஆண்டு முற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வெளியானால் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு அது போக நேரிடும்.

அப்படி போகுமாக இருந்தால் விளைவுகள் அதிபருக்கு சாதகமாக இருக்காது. இப்போதே அதிபரின் சட்டத்தரணி பொய் கூறியமைக்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

இப்படி ஒன்று கிடக்க இன்னொன்று நடப்பதால் தடுமாறிய அதிபர், திடீரென கவனத்திசை திருப்பல்போல சிரியாவில் இருந்து அமெரிக்கப்படைகளை திருப்பி எடுக்கும்படி கூறிவிட்டார். இது ரஸ்யாவுக்கு சாதகமான செயல்.

இது குறித்த அதிருப்தி தெரிவித்து தான் பதவி விலகுவதாக படைத்துறை அமைச்சர் யோன் மற்றீஸ் பதவி அறிவித்தது தெரிந்ததே. இவர் வரும் மாசி முறைப்படி வெளியேறுவார். அப்போது றொபேட் மூலர் அறிக்கையும் வெளிவர வாய்ப்புண்டு.

இதே விவகாரத்தை ஆதாரமாகக் கொண்டு அமெரிக்க அதிபருக்கான ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிபுணரான பிறீற் மக்குவாக்கும் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார் என்று ஏ.பி.செய்தித்தாபனம் கூறுகிறது.

இந்த நபர் 2015 ம் ஆண்டிலேயே முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமெரிக்கப்படைகள் சிரியா, ஈராக் நாடுகளில் நிலை கொள்வது அவசியம் என்ற ஆலோசனையை வழங்கியவராகும். அவரும் மனமுடைந்து பதவிக்காலம் முடிய முன்னரே வெளியேறுகிறார்.

அமெரிக்க அதிபர் கூறுவது போல சிரியா நாட்டில் ஐ.எஸ். அமைப்பு முற்றாக ஒழிக்கப்படவில்லை என்பதும், இந்த வெளியேற்றத்தால் ஈரான் – ரஸ்யாவின் கரங்கள் ஓங்கப்போவதாகவும் முன்னரே பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க செய்திகளில் மேலும் ஒரு விடயம் அதி முக்கியம் பெறுகிறது. சீனாவின் சைபர் கிரைம் தாக்குதல்கள் அமெரிக்கா மீதும், அதன் நேச நாடுகள் மீதும் மிக மோசமான அளவில் நடைபெறுவதாக கூறுவதே நம் கவனத்தை தொடுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், சுவீடன், பின்லாந்து, ஜேர்மனி உட்பட மொத்தம் 12 நாடுகள் சீனாவின் சைபர் கிரைம் தாக்குதலை எதிர்கொள்வதாகவும் கூறுகிறது.

இத்தகவலை வெளியிட முன்னர்..

இந்த நாடுகளின் பொருளாதார வளங்களை இணைய வழி களவாட முயல்வோர்கள் குறித்த தகவல்களை திரட்டியுள்ளனர். இவ்வாறு திரட்டப்பட்டோரில் பெரும்பாலானவர்கள் சீனாவின் உளவுப்பிரிவோடு நேரடியாக தொடர்புடையவர்களாக இருப்பதைக் கண்டுள்ளனர்.

இதனால் இந்த அதிர்ச்சி அறிக்கை வெளியாகியிருக்கிறது. சீனா இது குறித்து வாய் திறக்கவில்லை.

அலைகள் 23.12.2018 ஞாயிறு

Related posts