ஆமையும் கொக்குகளும் கதையா மகிந்தவின் எதிர்காலம்..?

உலகத்தின் முதல் பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி என்று சாதனைகள் படைத்த நாடு சிறீலங்கா என்று போற்றுகிறார்கள் சிலர்.

ஆனால் கடந்த ஐம்பது தினங்களில் இரண்டு பிரதமர்கள் நாடென்ற புகழை பெற்றதும் இந்த நாடே. இப்போது மகிந்தவா சம்மந்தரா எதிர்க்கட்சித் தலைவர் என்று தெரியாது இரண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் என்ற புகழை அடைந்துள்ளது.

மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க முடியாது என்கிறது கூட்டமைப்பு காரணம் :

அவருடைய கட்சியை சேர்ந்தவரே ஜனாதிபதி, அவரோ தன்னிடம் பல மந்திரிசபைகளை வைத்துள்ளார். ஆகவே அவர் ஆளும் கட்சியாக இருக்கிறார். எனவே அவருடைய கட்சியில் இருக்கும் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக முடியாது என்று கடிதம் எழுதியிருக்கிறது கூட்டமைப்பு..

ஐ.தே.க பிரதமர் பதவியை வகித்தால் எதிர்க்கட்சிக்கான அதிக ஆசனங்களை கொண்ட மகிந்தவே எதிர்க்கட்சி தலைவர் என்பது மகிந்த அணியின் எதிர் வாதம்.

மேலும் கூட்டமைப்பும் ஐ.தே.கவின் மடிக்குள் மறைந்திருப்பதால் அவர்களும் எதிர்க்கட்சியாக இருக்க முடியாதென்பது மகிந்த வாதம்.

மைத்திரியும் மந்திரி.. ரணிலும் மந்திரி..

மைத்திரியின் மடியில் மகிந்த, ரணிலின் மடியில் சம்மந்தர்.. இதில் யார் யாருக்கு எதரி இதுதான் சபாநாயகருக்கு குழப்பம்.

இரு தரப்பிலும் அவரவர் வசதிக்கேற்ப ஒவ்வொரு நியாயங்கள் இருக்கிறது. ஆகவே சபாநாயகரே இறுதி முடிவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

யோசித்து முடிவெடுப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரியா கூறுகிறார். கோபம் கொண்ட வாசுதேவ நாணயக்காரா இந்த அரசாங்கம் நீதிமன்ற அரசாங்கம் இதை மூன்று மாதங்களில் கவிழ்ப்போம் என்று முழங்கியிருக்கிறார்.

அவருடைய முழக்கத்தைப் பார்த்தால் மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் இழக்கப் போகிறார் போலிருக்கிறது.

சரி சம்மந்தர் எதிர்க்கட்சி தலைவராகி என்ன பயன்..? இதுவரை அவர் என்ன செய்தார் என்ற கேள்வி இருக்கிறது.
இருந்தாலும் அவரை விரட்டினால் தமிழர் அரசாங்கத்திற்கு வால் பிடித்து செல்லும் பழைய, செல்வா – பொன்னர் கொள்கை மீண்டும் தோல்வியடையும்.

இப்போதே புலம் பெயர் தமிழர் கொதிப்படைந்துள்ளார்கள். எல்லோரும் சேர்ந்து தமிழனுக்கு இடியப்பம் தீத்தி விட்டதாக.. ஒரு கொதிப்பு தெரிகிறது.

அது மனோ கணேசனின் காதுக்கு கேட்டதோ என்னவோ ஜனாதிபதி மகிந்தவை ஏமாற்றி இடியப்பம் தீத்திவிட்டார் என்று கதையை மாற்றிக் கூறியிருக்கிறார். இவருக்கு இதுதானே வேலை.

இப்போது மகிந்தராஜபக்ஷ அதல விதல சுதல பாதாளத்தில் விழுந்து 15 வருடங்கள் பின்னால் போய்விட்டதாகவும் முழங்கியுள்ளார். மந்திரிப்பதவிக்காக செஞ்சோற்று கடன் தீர்க்க அவர் நடத்தும் நாடகம் இது.

மந்திரிசபை பட்டியலை பார்த்தால் தமிழர்களுக்கு உருப்படியான மந்திரி பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. மனோ கணேசனுக்கு மட்டும் எதோ சிலதை கொடுத்து, புலிப்புராணம் பாடிய விஜயகலா இல்லாத காரணத்தால் இந்து கலாச்சார அமைச்சையும் கொடுத்துள்ளார்கள்.

செல்லாக்காசு மந்திரி யாராவது இருக்கிறார்களா என்றால் அது இந்து கலாச்சார அமைச்சர்தான் என்பது பழைய மட்டக்களப்பு இராஜதுரை காலத்து பழைய விடயம்.

இந்து கலாச்சாரத்தைவிட தமிழனுக்கு வேறென்ன கிடைக்கப் போகிறது..? அப்படிப்பார்த்தால் ஜனாதிபதி மனோ கணேசனுக்கும் இடியப்பம் தீத்தியுள்ளார் என்றே கூறலாம்.

உண்மையில் கடந்த ஐம்பது தினங்களில் நடந்தது என்ன..?

அடுத்த தேர்தலுக்கு என்ன புருடா விட்டு பதவிக்கு வரலாம் என்று கனவு கண்டபடி அரசியல்வாதிகள் அடைக்கோழிகள் போல தூங்கிக்கிடக்க யாரோ தண்ணி வாளியால் ஊற்றியது போல அடை கலைந்துள்ளார்கள்.

இல்லாவிட்டால் மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றாமல் இருந்திருப்பார்களே. அடைக்கோழி பறந்து போனது போன்று சிறீலங்கா பாராளுமன்ற கோழிகள் அடை கலையும் நேரமாக இது இருக்கிறது.

எப்படியோ பாதி நாடு கேட்டு ஐந்து வீடு கேட்குமளவுக்கு வந்துள்ள மகிந்தவுக்கு ஊசிமுனை நிலமும் இல்லையென்று மைத்திரி விரட்டியடிக்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

அப்படி வந்தால் வியாழபகவானுக்கு ஒரு பூசை வைக்க வேணும் ஏனென்றால் அரை மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு எல்லாம் இழந்து நிற்கும் வியாழேந்திரனுடன் மகிந்த கூட்டு வைக்க வேண்டியதுதான்.

கொக்குகளை நம்பி கம்பை கடித்தபடி சென்ற ஆமைபோல மகிந்த போகிறார்.. இப்போது ஆமை வாயை திறந்துவிட்டது போலும்..

அலைகள் 21.12.2018

Related posts