நாமல் குமாரவின் அழிக்கப்பட்ட உரையாடல்கள் மீட்பு

நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றவியல் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் ஆதாரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் குறித்த கையடக்க தொலைபேசியிலிருந்து ஒரு சில உரையாடல்கள் அழிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை பெறும் தொழில்நுட்பம் இலங்கையில் இல்லை என்பதன் காரணமாக, வெளிநாட்டிற்கு அதனை கொண்டு சென்று பரீட்சிப்பதற்கு அனுமதி வழங்குமாறு சிஐடி யினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியில் உள்ள அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகள் தொடர்பிலான தகவல்களை பெறுவதற்கு CID மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் குழு ஒன்று கடந்த டிசம்பர் 08 ஆம் திகதி ஹொங்கொங் சென்றிருந்தது.

அதற்கமைய குறித்த தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட பல்வேறு தொலைபேசி உரையாடல்கள் பெறப்பட்டுள்ளதாக CID யினர் இன்றைய வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றில் அறிவித்ததோடு, அவை அடங்கிய தரவு சேமிப்பகத்தை (Pen Drive) ஒன்றையும் நீதிமன்றில் சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்று (19) கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த தரவுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள தீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இவ்வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான இந்திய நாட்டவருக்கும் எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts