ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு : பிரதமர் ரணில்

காலிமுகத்திடலில் பிரதமர் ரணில் அடுத்த தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுத்தருமாறும் கோரிக்ைக

ஒற்றையாட்சிக்குள் (ஏக்கிய ராஜ்ய) ஓர் அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும் என்றும் அது எந்த நிலையிலும் மாற்றப்படாதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மக்கள் சக்தியை எவராலும் தோற்கடிக்க முடியாது என்று தெரிவித்த பிரதமர், நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அடுத்ததேர்தலில் தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவுடன் தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணியொன்று அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும் என்றும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதற்கான யோசனையை செயற்குழுவில் முன்வைக்கப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றி விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், பாராளுமன்றத் தேர்தலில் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுத்தருமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டதுடன் குறைகள் நிவர்த்திசெய்யப்பட்டு ஜனநாயகத்தை நிலைநாட்டும் பயணத்திற்கு உரமூட்டுமாறும் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் அமைத்தவுடன் குறைகளை நிவர்த்திப்பதே முதலாவது கடமையென்றும் ஊழல் மோசடிக்கெதிரான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற இந்த வெற்றிவிழாவில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க :-

இதுதான் மக்கள் வெள்ளம். கடந்த 51 நாட்களாக எமக்குப் பலமாக இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

நெருப்புமேல் இருப்பது தாச்சியே, அப்பமல்ல. நேரடியாக நெருப்புக்கு முகங்கொடுப்பது தாச்சியே. இந்த வகையில் ஜனநாயகத்துக்கு எதிரான நெருப்புக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம். நாமனைவரும் இணைந்து அதனை இல்லாதொழித்துவிட்டே இன்று இங்கு கூடியுள்ளோம். ஜனநாயகத்துக்கு எதிரான நெருப்பை அணைக்க மக்கள் வெள்ளம் என்ற நீர் உள்ளது.

எமது பலம் என்னவென்பதை இப்போது அனைவரும் புரிந்துகொள்ளட்டும். மக்கள் இறைமையை இல்லாதொழிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது செயற்பாடுகள் மூலம் அது பாதுகாக்கக்கப்பட்டுள்ளது. இப்போது எனக்கு ஹிட்லரின் ஞாபகம் வருகிறது. ஹிட்லர் குறைவான பலத்துடன் ஆட்சிக்கு வந்தவர். அதில் இருந்துகொண்டு சர்வாதிகாரியாகச் செயற்பட்டு 10 இலட்சம் பேரை அழித்தவர் அவர்.

அதேபோன்று பெரும்பான்மையற்றவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தனர். அதற்காகப் பாராளுமன்ற நடவடிக்கைகளைச் சீர்குலைத்தனர். சபாநாயகரின் ஆசனத்தைக் கைப்பற்றினர். அதற்கருகிலுள்ள இரண்டு கதவுகளையும் மூடிவிட்டு அராஜகமாக செயற்பட்டனர். இவ்வாறு செயற்பட்டவர்களா நாட்டை நிர்வகிக்க முடியும்?

எந்த முயற்சியும் பலிக்காது இறுதியில் பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூளை தூவினர். அவர்களுக்கு ஜனநாயகம் மிளகாய்த்தூளாகியது. பாராளுமன்றத்தில் நாம் ஆறுமுறை எமது பெரும்பான்மையை நிரூபித்துள்ளோம். சிக்ஸர் அடித்துள்ளோம் எனக் குறிப்பிடமுடியும். அதனையடுத்து உச்ச நீதிமன்றம் சிக்ஸர் அடித்தது. அதன் மூலமான வெற்றியே இது.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்துக்கு நாம் அனைவருமே வாக்களித்தோம். அதில் 2/3 பெரும்பான்மை பலமில்லாமல் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் 2010 சட்டத்திலும் இதுபோன்றேயுள்ளது. 2/3 பெரும்பான்மை தொடர்பாக அதில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பான்மையைக் காட்ட முடியாதவர்களே ஆட்சியைப் பிடிக்க முற்பட்டனர். அதற்காக பெரும் சதி நடத்தப்பட்டது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும் நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்த இலங்கை என்பதிலும் எமக்கு நிலையான கொள்கையுள்ளது. அந்த நிலையிலிருந்து நாம் விலகவில்லை. தற்போது அவர்கள் நீதிமன்றத்தைத் தூற்றுகின்றனர். அப்படியானால் அவர்களில் 45 பேர் ஏன் நீதிமன்றத்திற்குச் சென்றனர்?

நாட்டில் சுயாதீனமான நீதிமன்றம் உருவாகுவதற்கு வழிவகுத்தவர்கள் நாமே. ஆணைக்குழுக்களை நியமித்து நாட்டில் சுயாதீனத்தை ஏற்படுத்தியதும் நாமே.

குறைபாடுகள் உள்ளன. அதை நாம் நிவர்த்திசெய்வோம். புதிய அரசாங்கத்தில் புதிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். குறைபாடுகளை நிவர்த்திப்பதே எமது பிரதான வேலை. ஊழல் மோசடிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அதில் தாமதிக்காது சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்போம். அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம். அதற்கான தடைகளைக் களைந்து திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

நாட்டின் பொருளாதாரம் போன்று வீட்டின் பொருளாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். இளைஞர்களுக்காக நாம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்து தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.

இருபெரும் எதிர்பார்ப்புகள் எமக்குள்ளன. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களே அவை. பாராளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்களாகிய நீங்கள் 2/3 பெரும்பான்மையை எமக்குப் பெற்றுத்தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன். வேறு எவரதும் உதவியில்லாமல் பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைத்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆதரவு தாருங்கள். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் குறைபாடுகளை நிவர்த்திசெய்து செயற்படவும் வாய்ப்பைப் பெற்றுத் தாருங்கள்.

அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணியாக நாம் எமது பயணத்தை தொடருவோம். தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எமது கூட்டணி உருவாக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை இதற்கான யோசனையை எமது செயற்குழுவில் நாம் முன்வைக்கவுள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts