வண்ணமகள் வாடாது இருக்கட்டும் அஞ்சலி ..

வண்ணமகள் பெற்றெடுத்த வண்ணத்துப்பூச்சியே !
விண்ணுலக பூக்கள் தேடி விரைவாய் பறந்ததேன் ?

கண்ணான கணவன் கலங்கியே தவிக்க..
கதிகலங்கிய அன்பு பிள்ளைகளோ அம்மா என்றே ஆசையுடன் தேட..
அதற்குள் பறந்த அவசரம்தான் என்ன?ஆர்க்கெடுத்துரைப்பேன் ஆறுதல்..!

உன் வீடு வந்தால் விளக்கேற்றிய ஒளி
பகலிலும் பட்டுத் தெறிப்பதேன் என்று எண்ணுவேன்..!

சிலவேளை தெய்வங்கள் மனித வடிவில் வருவதுண்டென
படித்த கதையை உன் முகத்தில் படிப்பேன்..!
விளக்கமின்றி வீடு வந்து சேர்வேன் !

தமிழ்ப் பண்புடன் வரவேற்கும் தாயாய் திகழ்ந்தாய் ..!
எந்த கேள்விக்கும் தயக்கமின்றி பதில் தந்தாய் ..!
தரணியாளும் வல்வை முத்துமாரி அருள்பெற்றாய் !
ஆர்க்கெடுத்தரைப்பேன் இதை !

உன்னை ஏன் அனுப்பினாள் .. ? ஏன் உடன் அழைத்தாள் ? என்ற
அன்னையின் கணக்கை அறிந்தவர் யார்?
சின்ன வயதுதான் ஆனால் வண்ண வண்ணமாய் வாழ்ந்தாய்!
குடும்பத்தை மட்டுமல்ல உறவு கடந்து ஊரவரையும் போற்றினாய் !

தேடிவந்தால் இல்லையென்று சொல்லாத இலட்சுமிகரம் உன் கரம் !
தொல்லையில்லாத வாழ்வு வாழ்ந்து காட்டிய தூய அறம் ! உன் அறம் !
இதை காவியங்களில் படித்துவிட்டு கதை என மறந்தேன் !
உன்னை பார்த்த பின் அவை மண்ணில் வாழ்வதும் கண்டேன்!
அன்புத் தாயே .. !
நீ ஏற்றிய விளக்கு அணையா விளக்கு!
விட்டு விடுதலை பெற்றாலும் ஒளியாய் நிறைந்தாய் உள்ளத்தில்!

வண்ணங்கள் அழிவதில்லை ! எண்ணங்கள் என்றும் மறைவதில்லை!
விடைபெற்று செல்லும் அன்பான வாசுகியே ..
அன்புக் கணவனையும் ஆசை பிள்ளைகளையும்
ஆறுதல் படுத்த ஆராலும் முடியவில்லை!
அந்தி படமுந்தி அவர் முன் வந்து நின்று ஆறுதல் சொல்லி விடு!
தூய உள்ளமே அத்தோடு உன் உயர்ந்த ஆத்மா சாந்தியடையட்டும்!
அன்னை முத்துமாரி அருளால்
எல்லோர் உள்ளங்களிலும் ஆறுதல் நிலவட்டும்!
அன்னை முத்துமாரியே அம்மா இவர்க்கு இக்கணமே ஆறுதல் கொடு !

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி !

கி. செ துரை

Related posts