ஊழல்வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர்

இந்த நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாத இலஞ்சம், ஊழல்வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர். எதிர்வரும் காலத்தில் அவ்வாறு நடக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (16) இடம் பெற்ற தேசிய நத்தார் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது நாட்டிலே சமாதானம், நல்லிணக்கத்திற்கு இந்த கிறிஸ்தவ கத்தோலிக்க போதனை மிக மிக முக்கியமானது. எனவே தேச ஒற்றுமைக்கு மாத்திரம் அல்ல பல்வேறு துறைகளுக்கும் முக்கிய அங்கம் வகிக்கின்றது. எனவே தாய், தந்தை, பிள்ளை மாத்திரம் அல்ல சமூகத்திலே எல்லாத் துறைகளுக்கும் இந்த சமாதானம் மிக மிக அவசியம்.

சமாதானத்திற்காக எங்களை நாங்கள் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். எல்லோர் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சமாதானம் நல்லிணக்கம் முக்கியமாகின்ற பல விடயங்கள் இருக்கின்றது.

அதனை வெறுமனே உரைகளின் ஊடாக மாத்திரம் திருப்தியடைய முடியாது. எனவே வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய அபிவிருத்தி ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

எமது நாட்டிலே நீண்ட காலமாக யுத்தம் இடம் பெற்ற காரணத்தினால் தற்போது சமாதானத்தின் தேவை எங்களுக்கு நன்றாக தெரிகின்றது.

நாங்கள் கடந்த நான்கு வருட காலமாக இந்த நாட்டிலே அபிவிருத்தி மாத்திரம் அல்ல சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக கடமையாற்றியுள்ளோம்.

வட கிழக்கிலே வாழ்கின்ற மக்களுக்கு அபிவிருத்திகள் மிக முக்கியமாக காணப்படுகின்றது. யுத்தம் இடம் பெற்ற பிரதேசங்களிலே கூடுதலான கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும் முகம்கொடுத்த மாவட்டம் இந்த மாவட்டங்கள் தான்.

யுத்தம் இடம் பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக அதை முன்னெடுத்து செயல்பட்டு இந்த அரசாங்கம் வருகின்றது.

அதனை தனியார் யாரும் செய்ய முடியாது. அரசியல் வாதிகள், அரச உத்தியோகஸ்தர்கள் பொறுப்பையும் தலைமைத்துவத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதனை போன்று எமது வணக்கத்திற்கூறிய அனைத்த குருக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லா பிரஜைகளும் அதிலே ஒன்று சேர வேண்டும். நாங்கள் ஒன்று பட்டு செய்தால் தான் அதிலே வெற்றி காண வேண்டும். பிரிந்து செயல்படுவது நல்லதொரு காரியம் அல்ல.

சமூகத்திற்கு தேவை ஒற்றுமைதான். வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேளைத்திட்டங்களுக்காக ஜனாதிபதி அபிவிருத்தி செயலணி ஒன்றை உருவாக்கி உள்ளேன் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். அதனூடாக பல்வேறு நல்ல திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே யுத்த காலத்தின் போது அரசாங்கம் பெற்றுக்கொண்ட காணிகளில் தற்போது 90 வீதமான காணிகளை விடுவித்திருக்கின்றோம். அதே போன்று வீடமைப்புத் திட்டங்களையும் நாங்கள் செய்து கொண்டு போகின்றோம்.

வடக்கிலே 50 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்திய வங்கியினூடாக அதற்கான பணமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த வீடமைப்புத் திட்டத்தை பெற்றுக்கொள்ளுவதற்காக அரசியல்வாதிகள் மூன்றரை வருடங்களாக அங்கும் இங்குமாக போராடிக்கொண்டிருந்தார்கள்.

சண்டை பிடித்துக் கொண்டு இருந்தார்கள். பல வீடமைப்புத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தியாகினாலும் கூட 20 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தை எங்களினால் ஆரம்பிக்க முடியவில்லை.

அது மாத்திரம் இல்லை அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் குறித்த வீடுகளை யார் கட்டுவது என்ற பிரச்சினை காணப்பட்டமையினால் இந்த வீடுகளை கட்டி முடிக்கவில்லை.

இவ்வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அளவில் குறித்த 50 ஆயிரம் வீடமைப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் மீளவும் இந்தியாவிற்கே சென்று விட்டது. எமது நாட்டின் அரசியல் வாதிகள் எவ்வளவு நல்லவர்கள் என்று உங்களுக்கு இதன் மூலமாக நன்றாக தெரிகின்றது அல்லவா?

அன்று அந்த சண்டை இலுபரி இல்லாமல் இருந்திருந்தால் 25 அயிரம் வீடுகளையாவது நாங்கள் கட்டி முடித்திருக்க முடியும். எமது நாட்டை மேம்படுத்திக்கொள்ள இலஞ்சம், மோசடி இல்லாத நல்லதொரு நிலமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாதாள குழு, போதைப்பொருட்களுடன் சம்மந்தம் இல்லாத, தேவையற்ற விடயங்களோடு சம்மந்தம் இல்லாத அரசியல் வாதிகளை பெற்றுத்தாருங்கள் என வேண்டிக்கொள்வோம். இந்த ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் வருகின்றவர்கள் அதிகமானவர்கள் நாட்டு மக்களுக்காக சேவை செய்வதற்காக வருவதில்லை.

எங்களுடைய நாட்டிலே அரசியல் வாதிகளில் பல பேர் மிகவும் மோசமானவர்கள். பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய பல அங்கத்தவர்கள் மிக மோசமானவர்கள். எமது நாட்டிலே அபிவிருத்தி குறைவதற்கான காரணம் அது தான். மோசமான அரசியல் வாதிகள் காரணமாக இந்த நாட்டு மக்களிடம் ஏழ்மை, வறுமை அதிகரித்துச் செல்கின்றது.

நான் கட்சி பேதம் இன்றியே இவ்வாறு கூறுகின்றேன்.நான் ஜனாதிபதியாகி 4 வருடங்கள் பூர்த்தியாகுவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. இந்த நான்கு வருட காலத்திலே எனது முக்கியமான அனுபவம் தான் என்ன? இந்த நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாத இலஞ்சம், ஊழல் வாதிகளையே மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கின்றனர். எதிர்வரும் காலத்தில் அவ்வாறு நடக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts