சிவகார்த்திகேயனின் கனவு பலிக்குமா..? சொந்தப் படம் ரிலீஸ் !

நடிகர் சிவகார்த்திகேயன் அவர் பெயரில் சொந்த பட நிறுவனத்தை தொடங்கி, ‘கனா’ என்ற படத்தை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தயாரித்து இருக்கிறார்.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடித்து இருக்கிறார்கள். படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்களில் ஒருவரான கலையரசு பேசும்போது கூறியதாவது:-

கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால்தான் அது தயாரிப்பாளருக்கு லாபகரமாக அமையும். அந்த வகையில், இந்த படத்தின் டைரக்டர் எங்களுக்கு கிடைத்த வரம். சின்ன படமாக இருந்த ‘கனா’ சத்யராஜ் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது.

சத்யராஜை எல்லோரும் கட்டப்பா என்றுதான் அழைக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆனபின், அவரை முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என்று நம்புகிறேன். விளையாட்டே தெரியாமல், ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்து இருக்கிறார். நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தால், ஐஸ்வர்யா ராஜேஷ் ரத்தம் சிந்தி உழைத்து இருக்கிறார்.

இவ்வாறு தயாரிப்பாளர் கலையரசு உருக்கமாக கூறினார்.

சத்யராஜ் பேசியதாவது:-

“படம் நன்றாக இருந்தால் மக்களே படத்தை கொண்டு சேர்ப்பார்கள். அதை புகழ்ந்து பேச வேண்டிய அவசியமில்லை. கிரிக்கெட் தெரியாமல், அதை கற்றுக் கொண்டு நடிப்பது, மிகப்பெரிய சவால். ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய உழைப்பை கொடுத்து இருக்கிறார்.

சினிமா தெரிந்த ஒரு படைப்பாளி ஜெயிக்கும்போது, அது சினிமாவுக்கு நல்லது. அருண்ராஜா காமராஜ் அப்படிப்பட்ட ஒரு டைரக்டர். விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள் எங்கு போனாலும் வெற்றி பெறும். இந்த படம், ‘தங்கல்’ (இந்தி) படம் மாதிரி சீனாவிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.”

மேற்கண்டவாறு சத்யராஜ் பேசினார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:-

“நான் கடுமையாக உழைத்திருப்பதாக எல்லோரும் சொன்னார்கள். கடுமையாக உழைக்க வேண்டும் என்ற ஆசை மட்டும்தான் எனக்கு இருக்கிறது. அதை சாத்தியப்படுத்த டைரக்டர் அருண்ராஜா காமராஜ் முதல் படக்குழுவில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் என்னை ஊக்கப்படுத்தி நடிக்கவைத்தார்கள்.

என் அப்பா இருந்தால் சத்யராஜ் மாதிரிதான் இருந்திருப்பார். என் அப்பா ஸ்தானத்தில்தான் அவரை வைத்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு புதிய முயற்சியாக இருக்கும்.”

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் தர்ஷன், இளவரசு, படத்தொகுப்பாளர் ரூபன், டைரக்டர் அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் பேசினார்கள்.

Related posts