நடிகர் பிரசாந்திற்கு மறுவாழ்வு தருமா ஜானி..?

ரெண்டரை கோடிக்கான பண வேட்டையில் சாகசம் செய்யும் எதிர் நாயகனின் கதையே ‘ஜானி’.

பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, பிரசாந்த், ஆத்மா பேட்ரிக் ஆகிய ஐவரும் பிசினஸ் பார்ட்னர்கள். சீட்டு ஆடும் கிளப், மதுபானக்கூடம் என பல தொழில்களைச் செய்து வரும் இவர்கள் பணத்துக்காக சில சட்டவிரோதச் செயல்களையும் செய்கின்றனர். ரெண்டரை கோடி ரூபாய் பணம் தயார் செய்தால் கையில் விலை உயர்ந்த போதைப்பொருள் கிடைக்கும் என்று பிரபுவின் நண்பர் சாயாஜி ஷிண்டே கூறுகிறார். இதற்காக ஐவரும் இணைந்து ஆளுக்கு ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்கிறார்கள்.

பணத்தை சாயாஜி ஷிண்டேவிடம் யார் கொடுப்பது, பொருள் வாங்குவது எப்படி? பயணமுறை, பிக் அப் செய்வது என எல்லாம் பக்காவாக திட்டமிடப்படுகிறது. ஆனால், பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மா பாட்ரிக் கொல்லப்படுகிறார். அதற்கடுத்து பிரபு, சாயாஜி ஷிண்டே, ஆனந்த் ராஜ், அஷுதோஷ் ராணா என நால்வரும் அடுத்தடுத்துக் கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளைச் செய்பவர் யார், ஏன் அந்தக் கொலைக்கான பின்னணி என்ன, பிரசாந்த் எப்படி இதில் சிக்கி மீள்கிறார், துரோகி யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

‘கத்தி’யின் எதிர் நாயகன் நீல் நிதின் முகேஷ் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த ‘ஜானி கத்தார்’ படத்தை தமிழில் இயக்குநர் வெற்றிச்செல்வன் மறு ஆக்கம் செய்திருக்கிறார்.

‘சாஹசம்’ படத்துக்குப் பிறகு இன்னும் கொஞ்சம் அதிக எடையுடன் வந்து திரையை ஆக்கிரமிக்கிறார் பிரசாந்த். பயம், பதற்றம், பீதி, குற்ற உணர்ச்சி, சோகம், வெறி, ஆவேசம், தயக்கம், அப்பாவித்தனம் என எல்லா உணர்வுகளுக்கும் ஒரே மாதிரியான முக பாவனைகளால் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார். கதையின் முக்கியக் காட்சிகளில் பிரசாந்தின் ரியாக்‌ஷன்கள் சொதப்பல்.

பிரபுவும் வழக்கமான நடிப்பைக் கொடுக்கத் தவறியிருக்கிறார். அஷுதோஷ் ராணாவும், ஆனந்த்ராஜும் நடிப்பில் ரசிக்க வைக்கிறார்கள். ஆத்மா பாட்ரிக், கலைராணி, தேவதர்ஷினி ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

கதாநாயகிக்கான பங்களிப்பு கவர்ச்சிதான் என்று சஞ்சிதா ஷெட்டி எப்படி நம்பினார் என்று தெரியவில்லை. அவரின் தாராளம் முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது. சாயாஜி ஷிண்டேவின் தமிழ் அவ்வளவு உவப்பாக இல்லை. நடிப்பிலும் தளர்வு தெரிகிறது.

”சாகடிச்சுப் பாத்திருப்ப, இப்போ செத்துப் பாரு”, ”தூரமா போகும்போது தும்மினா போற காரியம் நடக்காதுன்னு என் மனைவி சொல்லுவா… இப்போ அது நடந்துடுச்சு” போன்ற தியாகராஜன் வசனங்கள் படத்தின் பரபரப்பைக் குறைத்து கிச்சுகிச்சு மூட்டுகின்றன. ”அவங்க செத்ததுல தப்பில்லை. அவங்க யாரும் உத்தமனில்லை” என்ற வசனத்தில் மட்டும் கொலைக்கான காரணங்களை நியாயப்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. அது சரியாக சொல்லப்படாததால் அதுவே படத்தின் பலவீனமான அம்சமாகிவிடுகிறது.

சும்மா ரெண்டு மிரட்டு மிரட்டி எல்லாம் எனக்குத் தெரியும் என்று எந்த கேரக்டர் சொன்னாலும் அப்படியே ஆமாம் சாமி போட்டு பிரசாந்த் ஒப்பிக்கிறார். இது நம்பும்படியாக இல்லை. பிரசாந்தும் யாரையும் தேடிப் போய் குழப்புவது, பிரச்சினையைச் சொல்வது என்று தேடலுடன் இல்லை. அவர் பாட்டுக்கு சும்மா இருக்கிறார். வருகிறவர்கள் எல்லாம் வான்டட் ஆக வந்து வண்டியில் ஏறுகிறார்கள். இதனால் நாயகனுக்கான சவாலே இல்லாமல் போகிறது. இந்த இடத்தில் மட்டும் திரைக்கதை சறுக்குகிறது.

எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. ரஞ்சன் துரைராஜ் பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது. பாடல்கள் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல்.

குளோரோபார்ம் மூலம் மயக்கம் வரவழைப்பது, ஜானி பெயர் பயன்படுத்தும் இடம், பாக்யராஜ் படம் பார்த்துவிட்டு அதற்கேற்ப ஒரு திட்டமிடுவது என வெற்றிச்செல்வன் சில அம்சங்களை படத்தில் நுட்பமாகப் பயன்படுத்தி இருக்கிறார். மொத்தத்தில் பிரசாந்தின் முந்தையப் படங்களைக் காட்டிலும் ‘ஜானி’ அவரின் திரை வாழ்க்கை ஜான் அளவுக்கு முன்னேறப் பயன்பட்டுள்ளது.

Related posts