எனது 97-வது பிறந்த நாள் விழாவினை தவிர்த்திடுங்கள்- க.அன்பழகன்

தனது 97-வது பிறந்த நாளைத் தொண்டர்கள் கொண்டாடுவதைத் தவிர்த்திட வேண்டும் என, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் நீண்ட கால பொதுச் செயலாளரான க.அன்பழகன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெடுங்கால நண்பராவார். கருணாநிதி வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், தள்ளாத வயதிலும் அவரது உடல் நிலை குறித்து விசாரிக்க தினமும் மருத்துவமனைக்கு வருவார். மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தபோதும், தற்போது தலைவராக உள்ள நிலையிலும், கட்சியின் முக்கியச் செயல்பாடுகளுக்கு க.அன்பழகனின் ஆலோசனைகளை அவ்வப்போது ஸ்டாலின் பெறுவார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவுடன் உள்ள க.அன்பழகன், தன்னுடைய வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். ஆண்டுதோறும் தன்னுடைய பிறந்த நாளுக்கு கருணாநிதியின் வாழ்த்தைப் பெறுவார் அன்பழகன். அதேபோன்று, அண்ணா நினைவிடத்திற்கும், பெரியார் திடலுக்கும் சென்று மரியாதை செலுத்துவார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட க.அன்பழகன், தற்போது தன்னுடைய வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார்.

இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி வரவுள்ள, தன்னுடைய 97-வது பிறந்தநாள் விழாவினை கருணாநிதி மறைவு மற்றும் ‘கஜா’ புயல் பாதிப்புகள் காரணமாக தவிர்க்க வேண்டும் என, க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக க.அன்பழகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக, தன் வாழ்நாள் முழுதும் தன்னை வருத்திக் கொண்டு பாடுபட்ட தலைவர் கருணாநிதி, உடல் நலிவுற்று, அண்ணா நினைவிடத்திற்கு அருகில், மீளாத் துயிலில் ஓய்வெடுக்கச் சென்ற நிலையிலும், புயலின் கோரத் தாக்கத்தால், மக்களும் – மரங்களும் பெரும் அழிவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னலுறும் நிலையில், வரும் 19 ஆம் தேதி, எனது 97-வது பிறந்த நாள் விழாவினைத் தவிர்த்திட விழைகிறேன்.

மேலும், என் உடல்நிலை கருதி, அந்த நாளில் கழகத் தோழர்கள், உறவினர்கள், என்னை நேரில் காண்பதை முழுமையாகத் தவிர்க்க அன்புடன் வேண்டுகிறேன். மக்கள் நலம் காக்கும் சமுதாயப் பணிகளையும் – இயக்கப் பணிகளையும் தொடர்ந்து ஆற்றிட வேண்டுகிறேன்” என க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Related posts