சீனாவுக்கென கூகுள் தேடல் எந்திரம் இல்லை

சீனாவுக்கு தனியாக கூகுள் தேடு பொறி சேவையை அறிமுகம் செய்யும் திட்டமில்லை என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது என அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழுவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

விசாரணைக்கு நேரில் ஆஜரான சுந்தர் பிச்சை, சீனாவுக்கான சேவைகளை அளிப்பதில் வெளிப்படையாக இருப்போம் என்றார். சீனாவில் இண்டெர்நெட் செயல்பட கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் கூகுள் 2010-ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுந்தர் பிச்சை கூறியதாவது: “சீனாவில் அறிமுகம் செய்ய திட்டம் எதுவும் இல்லை. அனைவரும் தகவல்களைப் பெற வேண்டும், அனைவரும் அனைத்துத் தகவல்களையும் பெற வேண்டும், இது மனித உரிமை என்ற கொள்கையில் மாற்றமில்லை” என்று சுந்தர் பிச்சை அமெரிக்க நாடாளுமன்ற விசாரணையில் தெரிவித்தார்.

2010-ல் கூகுள் சீனாவிலிருந்து வெளியேறியதற்கு ஜனநாயக மதிப்புகளைக் காப்பதாகவும் லாப நோக்கில் செயல்படவில்லை என்பதற்காகவும் கூகுள் நிறுவனம் கடும் பாராட்டுகளை அமெரிக்காவில் பெற்றது.

சீனாவில் கூகுள் தேடல் எந்திரத் தரவுகளை சென்சார் செய்தனர், மக்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதை சீன அரசு கண்காணித்தது, இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற அளவில் மட்டுமல்லாமல் கூகுள் ஊழியர்களிடையேயும் பலத்த எதிர்ப்பு இருந்தது.

இன்னும் இந்த எதிர்ப்பு மறையவில்லை என்பதாலும், கொள்கை அளவிலேயே சீனாவுக்காக சென்சார் செய்யப்பட்ட கூகுள் தேடல் எந்திரத்தை அறிமுகம் செய்ய எந்தவிதமான திட்டமும் இல்லை என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்

Related posts