இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 68 வது பிறந்த நாள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று 68 வது பிறந்த நாள் உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்களினால் இந்த நாள் சிறப்போடு கொண்டாடப்படுகிறது.

சிவாஜிராவ் ஹைவாட் என்ற பெயர் கொண்ட ரஜினிகாந்த் 1950 டிசம்பர் 12ம் திகதி
கன்னடம் பெங்களுர் மைசூர் ஸ்ரேற்றில் பிறந்தவராகும். இளமைக்காலத்தில் பேருந்து நடத்துனராக இருந்தவர்.

தமிழ் திரையுலகில் 1975ம் ஆண்டு கே.பாலசந்தரின் அபூர்வராகங்கள் என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். பாலசந்தர் அறிமுகம் செய்த கமல், ரஜினி என்ற இரு பெரும் நடிகர்களில் ஒருவர்.

அதன் பின்னர் கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்று முடிச்சு படம் இவருடைய வாழ்வில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் வரை இவருடைய பயணம் பாலசந்தர் பட்டறையில் நன்கு பட்டை தீட்டப்பட்டது.

பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படம் இன்னொரு மாற்றம். இவரை பரட்டை என்ற பெயரில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. தமிழ்நாடு வந்து தமிழை புதியதோர் கோணத்தில் பேசி நடித்தது பலரதும் கவனத்தைத் தொட ஆரம்பித்தார்.

நடிப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தனக்கான ஒரு பாணியையும், ஸ்டைலையும் உருவாக்கி, சிகரட்டை வாயில் எறிந்து, தலை முடியை கோலி இழுத்து நடிக்கத் தொடங்கியபோது அவர் சந்தை எகிற ஆரம்பித்தது. ஏ.வி.எம். நிறுவனத்தில் எஸ்.பி.முத்துராமன் திரைப்படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்தார்.

ஆறில் இருந்து அறுபது வரையில் ஏறிய வெற்றிக் கொடி பாட்ஷாவில் உச்சம் பெற்று அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது.

அதன் பின்னர் ரஜினியின் படங்களுக்கு நாளுக்கு நாள் மவுசு ஏறிக்கொண்டே போனது. இடையில் எம்.ஜி.ஆர் காலத்தில் ஒரு வீழ்ச்சி வந்து அதன் பின்னர் அவர் அடுத்தகட்ட எழுச்சிக்குள் போகிறார்.

முத்து திரைப்படம் அவர் வாழ்வில் இன்னொரு முன்னேற்றம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகி பெரும் சாதனை படைத்தது.

தொடர்ந்து அவருக்கு பெரும் பாராட்டை தேடிக் கொடுத்த திரைப்படம் படையப்பா 117 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி ஓடியது. அதே வேகத்தில் சந்திரமுகி வந்தது அது மூன்று ஆண்டுகள் சாந்தி திரையரங்கில் தொடர்ந்து சாதனைக்காக 600 தினங்களுக்கு மேல் காண்பிக்கப்பட்டது. மூன்று தீபாவளிகள் ஓடிய எம்.கே.தியாகராஜா பாகவதரின் ஹரிதாஸ் திரைப்படத்தின் முறியடிக்க முடியாத சாதனை முறியடிக்க முயன்றனர்.

அவர் வாழ்வில் அடுத்த திருப்பம் சிவாஜி திரைப்படம், தொடர்ந்து எந்திரன் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தார். வசூலில் சாதனை படைத்தது. கபாலி ஒரு திருப்பமாக அமைந்தது. தற்போது அவர் நடித்து வெளியாகியிருக்கும் 2.0 ஆசியாவிலேயே அதிக பணச் செலவில் தயாரான திரைப்படமாகும். 543 கோடியில் லைக்கா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இன்று அவருடைய பிறந்த தினத்தில் 2.0 திரைப்படம் சென்னையில் மட்டும் 19 கோடி வசூல் எடுத்து பாகுபலி – 2 ன் வசூலை முறியடித்து, உலகளாவிய வசூலாக 500 கோடிகளை உழைத்துள்ளது. சீனாவில் பல்லாயிரக்கணக்கான திரைகளில் வெளிவர இருக்கிறது.

மற்றவர் நடிப்பை பிரதிபலிக்காமல் தானே தனக்கொரு நடிப்பு முறையையும், ஸ்டைலையும் உருவாக்கியவர் ரஜினி.

வீணான பந்தா இல்லாமல் ஆரம்ப காலம் போலவே இன்றுவரை எளிமையாக இருப்பது. தான் குடியேறிய தமிழக மக்களை என்னை வாழ வைத்த தெய்வங்களே என்று போற்றுவது. போன்ற பல்வேறு சாகசமான செயல்களால் தொடர்ந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

புதிதாக அரசியல் கட்சி தொடங்கியிருந்தாலும் எம்.ஜி.ஆரின் இடத்தை யாராலும் எட்டித்தொட முடியாது என்று அவர் கூறியிருப்பது, அந்த இடத்தை பிடிக்கப் போகிறார் என்பதற்கான செய்தியாகும்.

காரணம் அமிதாப்பாச்சனின் வருமானத்தை தொட முடியாது என்றவர் இன்று 2.0 வில் அவரை முந்தியிருக்கிறார்.

ஆகவேதான் எம்.ஜி.ஆரைவிட குறைவு என்று கூறுவது அந்த இலக்கை நோக்கிய பாய்ச்சலாகவே இருக்கிறது.

இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டாலும் புத்தெழுச்சி பெற்ற ரஜினியின் தன்னம்பிக்கையை அவருடைய எதிரிகளும் மதிக்கத்தான் செய்கிறார்கள்.

அவர் தமிழரில்லை என்று விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு வர்த்தக வெற்றி கொடுத்தவர் என்ற கோணத்தில் பார்த்தால் அவரை இந்த நேரம் வாழ்த்துவது தமிழர் கடமை என்பதை சொல்லவும் வேண்டுமோ..?

அலைகள் 12.12.2018 புதன்

Related posts