முதல்வன் 2’ எடுத்தால் யார் ஹீரோ?

முதல்வன் 2’ எடுத்தால் யார் ஹீரோ? என்ற கேள்விக்கு இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து பதில் அளித்தார்.

‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் அறிமுகமானார் இயக்குநர் ஷங்கர். இதையடுத்து அதே நிறுவனத்துக்கு ‘காதலன்’ படத்தை வழங்கினார். முதல் படத்தில் அர்ஜுனையும், அடுத்த படத்தில் பிரபுதேவாவையும் நாயகனாக்கிய ஷங்கர், மூன்றாவது படமாக சூர்யா மூவீஸ் ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், கமலின் நடிப்பில் ‘இந்தியன்’ படத்தைத் தயாரித்தார்.

இதையடுத்து அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில், பிரசாந்தை ஹீரோவாக்கி ‘ஜீன்ஸ்’ படத்தை இயக்கிய ஷங்கர், எஸ் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலமாக இன்றுவரை எத்தனையோ இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் வழங்கிய ஷங்கர், தயாரிப்பின் முதல் படத்தை தானே இயக்கினார். அந்தப் படமே ‘முதல்வன்’.

அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு, விஎம்சி.ஹனீபா, விஜயகுமார் முதலானோர் நடித்த அந்தப் படம், 1999-ம் ஆண்டு ரிலீஸானது. மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கமலுடன் இணைந்துள்ளார் ஷங்கர். வருகிற 14-ம் தேதி முதல் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

‘முதல்வன்’ படம் வெளியாகி, 19 வருடங்கள் முடியும் தருணத்தில், 20-ம் வருடம் வர இருக்கிற இந்த வேளையில், ஸ்ருதிஹாசன் சன் டிவியில் நடத்திவரும் ‘ஹலோ சகோ எனும்’ நிகழ்ச்சியில், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு, மனம் விட்டுப் பேசினார்.

அப்போது ஷங்கரிடம், ‘முதல்வன் 2 எடுத்தால், யாரை வைத்து எடுப்பீர்கள்? ஹீரோ யார்?’ என்று ஸ்ருதிஹாசன் கேள்வி எழுப்பினார்.

உடனே கொஞ்சமும் யோசிக்காத ஷங்கர், ‘ரஜினி சார், கமல் சார். இவர்களுக்கு விருப்பமிருந்தால், இவர்களை வைத்து படமெடுப்பேன். இளைஞராக இருக்கும் பட்சத்தில், நடிகர் விஜய்தான் என் சாய்ஸ்’ என்று சட்டென்று பதிலளித்தார்.

‘இந்தியன் 2’ போல, ‘முதல்வன் 2’வையும் எதிர்பார்க்கலாமா ஷங்கர் சார் என்று இப்போதே ஆவலுடன் கேள்வி கேட்டுக் காத்திருக்கிறார்கள் ஷங்கரின் ரசிகர்கள்.

Related posts