உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 49

மிகுந்த சந்தோசம் உண்டாகட்டும்!
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். லூக்கா 2:10.

கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக முழுஉலகம் தயாராகிக் கொண்டுவருகிறது. ஆனால் தயாராகிக் கொண்டுவரும் உலகத்தால் உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டாட முடியதாவாறு பல துன்பங்கள் அழிவுகள் வந்ததையும், வருவதையும் வரவிருப்பதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.

அண்மைக்காலமாக அரபுதேசங்களிலும், இந்தியாவிலும் ஆபிரிக்காவிலும் மதக்கலவரங்களினாலும், பயங்கர வாதிகளின் நடபடிக்கையினாலும் அழிவு ஏற்பட்டு வருகிறது. இன்னும் பலநாடுகளில் உள்நாட்டுக் கலவரங்கள் உலகத்தை உலுக்கிய வண்ணமாவுள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு மாவீரர் தினமும் அதனை ஒட்டிய தடைகளும் துன்பங்களும் மிகவேதனை நிறைந்தவாழ்வை நாளாந்தம் ஞாபகப் படுத்திக்கொண்டு வருகிறது. உற்றாரை இழந்து செய்வது அறியாது கலங்கி நிற்கும் மக்கள் ஒருபக்கம், மரணம் வந்து எம்மை எடுத்துச் செல்லாத என வாழ்வில் வெறுப்பின் நிலையில் வாழும் மக்கள் மறுபக்கம். இந்நிலையில் எல்லாஜனத்திற்கும் மிகுந்தசந்தோசத்தை உண்டுபண்ணும் ஓர் மாதமாக, நாளாக இந்த கிறிஸ்மஸ் – மார்கழி மாதம் அமையுமா? வாழ்த்த விரும்பும் பலர் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் என எண்ணிலாலும் ஏதோ ஒன்று அவர்களை தடுப்பதை உணர்கிறார்கள்.

ஆனாலும் மனிதஇனத்தை பாவத்தில் இருந்தும் சாபத்தில் இருந்தும் மீட்கப்பிறந்த இரட்சகரின் பிறப்பு, நம்பிக்கை இழந்த மனித குலத்திற்கு மீண்டும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. இந்த மாபெரும் உண்மையையும் தேவனினின் கிருபை நிறைந்த இரக்கத்தையும் அன்பையும் வேதம் இவ்வாறு எமக்கு தெரிவிக்கிறது.

சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்ட வர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்; கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்; சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார் என இயேசு இரட்சகரின் பிறப்புக்கான காரணத்தை ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தேவன் வெளிப்படுத்தினார். ஏசாயா 61:1-3.

கிறிஸ்துவின் பிறப்பில் வெளிப்பட்ட தேவனின் அன்பானது, அவரது தெய்வீக உடன்படிக்கையின் அன்புக்கு அடையாளமாக இருக்கிறது. ஆம், நாம் பாவிகளாக இருக்கையில் அவர் நம்மில் அன்புகூர்ந்தார். அந்த அன்பை வெளிப்படுத்தவே அவர் மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்துதித்தார். அன்று ஏதேன் தோட்டத்தில் தாம் உருவாக்கிய மனிதன் விலக்கப்பட்ட கனியை புசித்ததன் மூலம் தேவகட்டளையை மீறி பாவம் செய்தான். அப்போது அவனோடு ஓர் உடன்படிக்கை செய்தார். ஒரு மீட்ப்பரை அனுப்பி விடுவிப்பேன் என்று.

ஆனால் பூமியில் பாவம் பெருகிற்று. அக்கிரமம் அழிவு பெருகிற்று. காலத்திற்கு காலம் பாவம் அக்கிரமம் அழிவுபெருகினாலும், அவைகளினால் மனுக்குலம் காக்கப்பட வேண்டும் என்பதில் கரிசனைகொண்டு, மனித சரித்திரத்தில் இடைப்பட்டு தமது உடன்படிக்கையின் அன்பை மறந்து போகாமல் மனுக்குலத்தை காக்க பலமுறை முற்பட்டார். மனுக்குலம் அதனை முழுமையாக அறியவில்லை. (இன்றும் கூட அதே நிலைதான்). அதனால் பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவை அன்பு செலுத்துவதன் மூலம், அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகம் பாவசாப அழிவில் இருந்து காக்கப்பட்டு அமைதியாக சந்தோசமாக வாழும்படியாக இயேசுவை உலகிற்கு அனுப்பினார்.

ஆம், ’’நமக்கு ஒரு மீட்பர் பிறந்து விட்டார்’’ என்ற நற்செய்தி பாவத்திலிருந்து மட்டுமல்ல பாவத்தின் சாபமாகிய வேதனைகளிருந்தும் நமக்கு விடுதலையை பெற்றுத்தருகிறது. எனவே இரட்சகர் இயேசுவின் பிறப்பு நம்பிக்கை இழந்த மனிதர் களுக்கு நம்பிக்கையையும், விடுதலையையும், ஆறுதலையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும் ஓர் நல்ல செய்தியாகும். இந்த நம்பிக்கையின் செய்தி நமதும், நம்மைச் சூழவுள்ள மக்களின் துயரங்களை நீக்கும் ஓர் நற்செய்தியாக அமையட்டும்.

அன்பின் ஆண்டவரே, இன்று இந்த சிந்தனையை தமது உள்ளங்களின் ஆழத்தில் இருந்து என்னுடன் தியானித்த அத்தனை பேருக்காகவும் உமக்கு நன்றி அப்பா. அவர்களின் இருதயத்தில் இருக்கிறதான சகலவேதனைகளும் உமது பிறப்பை நினைவுகூருவதன்மூலம் நீங்கிப் போகட்டும். தேவ அன்பு அவர்களையும், அவர்களின் இருதயங்களையும் நிரப்பட்டும். வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டு தேவனோடு வாழும் வாழ்கைக்கு தம்மை அர்ப்பணிக்கட்டும். யாவரையும் காத்து வழிநடத்தும் படியாக இயேசுவின் நாபமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts