சாமிநாதய்யரின் உழைப்புக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல ஜெயராமனின் உழைப்பு

நெல் என்பது தென்கிழக்காசிய‌ பாரம்பரிய உணவு, தென்னிந்தியாவிலும் அதுவே பிரதானம் உலகின் அடிப்படை உணவுகள் நெல் , கோதுமை என்ற இரண்டை தவிர வேறில்லை.

தமிழரின் பிரதான உணவான நெல்லில் ஏராளமான வகைகள் உண்டு அன்னமழகி , அறுபதாங்குறுவை
பூங்கார், கேரளசுந்தரி, குழியடிச்சான் (குழி வெடிச்சான் குள்ளங்கார், மைசூர்மல்லி, குடவாழை.. என தொடங்கி களர்பாலை ஓட்டடையான் என கிட்டதட்ட 200 நெல்கள் இதுவரை வகைபடுத்தபட்டுள்ளன இன்னும் ஏராளம் உண்டு

எப்பொழுது பாரம்பரித்தை தொலைத்தோம் என்றால் முதல் சிக்கல் வெள்ளையன் காலத்து செயற்கை பஞ்சங்களில் வந்தன, எங்கிருந்தோ பர்மா அரிசி வெளிநாட்டு அரிசி என கொட்டினான்

இரண்டாம் சிக்கல் சுதந்திரதிற்கு பின்னரான பஞ்ச காலங்களில் வந்தது, விளைச்சல் அதிகமிக்க ஒட்டுரக அரிசிகள் மேல் அரசுக்கு ஆர்வம் வந்தது.

ஆம் பாரம்பரிய அரிசிகள் நாட்டுகோழி போன்றவை குறைவாகத்தான் விளையும் ஆனால் சத்து மிக்கவை, இந்த ஒட்டு ரக அரிசிகள் பிராய்லர், ஜெர்சி பசு போன்றவை அதிகம் கொடுக்கும் அனால் சத்தே இல்லாதவை.

டாக்டர் ரிச்சாரியா நாட்டு நெல்லையே பயன்படுத்த சொன்னார், ஆனால் பின்புவந்த எம்.எஸ் சுவாமிநாதன் போன்றோர் நவீன அரிசிக்கு மாற சொன்னார்கள்.

அது ஐ.ஆர் 18, ஐ.ஆர் 20 என வந்து அம்பை 16, ஆடுதுறை 36 என எப்படி எல்லாமோ மாறியது, அது விளைச்சலை அள்ளிகொடுத்ததால் விவசாயிகள் அதன் பக்கம் தாவினர்.

பின் நெல் என்றாலே ஐ.ஆர் 16, அம்பை 16 என்றானது, இன்று என்ன அரிசி உண்கின்றோம் என நமக்கே தெரியவில்லை, சம்பா எனும் சிகப்பரிசி தவிர எதுவுமே அடையாளமில்லை.

ஆளாளுக்கு எதனையோ விற்கின்றார்கள், வாங்கி உண்கின்றோம், பிளாஸ்டிக் அரிசியாய் இருக்க கூடாது என்ற கவலையன்றி வேறல்ல‌ இயற்கை நெல்தன்மையினை மாற்றி உற்பத்தி செய்யபடும் அரிசி, இயற்கையான உடலுக்கு நிச்சயம் நல்லது செய்யாது.

அரிசி என்பது சர்க்கரைநோயினை உருவாக்கும் பொருள் என பெயர் வந்ததும், இந்த செயற்கை நெல்லின் வைக்கோலை தின்னும் மாட்டுபால் சத்து இல்லாமல் போனதும் இப்படித்தான்
இரண்டாம் உலகப்போர் வரை சப்பாத்தி, மைதா வகைகள் உண்ணும் அவசியம் தென்னாட்டவருக்கு வந்ததில்லை. இப்பொழுதே கோதுமை தமிழரின் பிராதன உணவு, இரவு வீதியெங்கும் பரோட்டா கடைகள் சர்க்கரை வியாதி என்பதும் இன்னும் சொல்லணா கொடூர வியாதிகள் இங்குதான் முளைவிட்டன‌.

தரமில்லா சத்தில்லா அரிசி எனும் சக்கை, கலப்பட எண்ணெய், ரசாயாண சர்க்கரை இன்னும் ஏராளமான விஷயங்களில் நோயின் பிடியில் சிக்கிவிட்டோம், ஆரோக்கியம் என்பது அரிதானது சுகர், பிரஷர் என்பதெல்லாம் சிறுவருக்கும் பொதுவாகிபோனது.

இந்நிலையில்தான் பாரம்பரிய அரிசி வகைகளை மீட்டெடுத்தால் நோயின்றி வாழலாம் என நம்மாழ்வார் போன்றோர் கிளம்பினார்கள் அவர்களில் ஒருவர்தான் நெல் ஜெயராமன். சும்மா சொல்ல கூடாது, தமிழ் பாடல்களை அச்சிலேற்ற அலையாய் அலைந்த சாமிநாதய்யரின் உழைப்புக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல ஜெயராமனின் உழைப்பு.

எங்கெல்லாமோ அலைந்து திரிந்து பாரம்பரிய நெல் வகைகளை மீட்டார், மேற்சொன்ன நெல்வகைகள் கிட்டதட்ட 150 வகை அவரால் மீட்கபட்டன.

திருதுறைபூண்டி அருகே தன் பண்ணையில் அந்நெல்பண்ணை வைத்திருந்தார், வருடாவருடம் விவசாய சந்திப்பு நடத்தி விவசாயிக்கு தலா 1 கிலோ பாரம்பரிய நெல்லை வழங்குவார்.

அவர்கள் அதை பெருக்கி 4 கிலோவாக வழங்குவார்கள் அதை மற்ற விவசாயிகளுக்கு கொடுப்பார் மிகபெரும் அமைதி புரட்சி இது , மிகபெரும் உழைப்பு இது..

பாரம்பரிய சிந்தனை, மக்களுக்கு நோயற்ற உணவு, இயற்கையான சத்தான உணவு என்ற பெருங்கனவு அன்றி இவை சாத்த்தியமில்லை. அந்த மாபெரும் மனிதர் இன்று இல்லை, ஆம் கொடிய நோய் அவரை தன் 50ம் வயதிலே காவு வாங்கிற்று..

இறுதிகாலத்தில் எல்லோரும் அவருக்கு உதவினார்கள், தமிழக அரசே இறங்கிவந்து அவருக்கு உதவி செய்தது ஆனால் விதி தன் கடமையினை செய்துவிட்டது.

தமிழக விவசாய உலகில் மறக்கமுடியாதவர் இந்த ஜெயராமன், மாபெரும் புரட்சியினை செய்தவர். இன்று ஓரளவு பாரம்பரிய நெல் மீட்கபட்டிருக்கின்றது, அவற்றை அழியாமல் காத்து பெருக்கி மக்களை நோயிலிருந்து விடுவிப்பதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி.

அரசு ஒரு பாரம்பரிய‌ நெல் கூடம் அமைத்து அதில் எல்லா பாரம்பரிய நெல்லையும் காப்பாற்றி விவசாயிகளுக்கு வழங்கி நல்லுணவினை வணங்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்.

பாரத ரத்னா விருதுக்கு முழுதும் தகுதியானவர் ஜெயராமன். ஒரு விவசாயியாக அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகின்றோம், நம்மோடு உலகெல்லாம் உள்ள நெல்கதிர்களும் தலைசாய்த்து அம்மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்துகின்றது.

பாவல் சங்கர் ( தமிழ்நாடு ) 08.12.2018

Related posts