அதிகாரத்தை தக்கவைக்க மைத்திரி – மஹிந்த சூழ்ச்சி

சட்ட விரோதமாக இடம்பெற்ற பிரதமர் நியமனத்தினைத் தக்கவைப்பதற்கான மைத்திரி – மஹிந்த தரப்பினரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளமையினால், முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவுள்ள 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் குறைகூற ஆரம்பித்துள்ளனர்” என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு 19ஆம் அரசியலமைப்புத் திருத்தமே காரணம் எனவும், அதன் உள்ளடக்கங்கள் தெளிவானதாக அமையவில்லை எனவும், எனவே 19ஆவது அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மைத்திரி – மஹிந்த தரப்பினர் பரவலாகக் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் வினவிய போதே அகில விராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அகில, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் 2015ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் அதுவரை காலமும் நாட்டின் ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தில் மட்டுப்பாடுகளை ஏற்படுத்தியதுடன், பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் அமைந்திருந்தது.

அதற்கு அன்று ஆதரவளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ஆதரவு அணியினர் தற்போது 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

Related posts