அமரர் ஜனுஸ்சன் சிவகுமார் நினைவாக உலக புகழ்பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள்

டென்மார்க் வீபோ நகரத்தில் வாழ்ந்தவரும், டென்மார்க் சட்டக்கல்லூரியின் முன்னாள் மாணவனுமான அமரர் ஜனுஸ்சன் சிவகுமாரின் 41வது நாள் நினைவுதினம் இன்றாகும்.

அமரர். ஜனுஸ்சன் சிவகுமார் நூலாசிரியர் கி.செ.துரையின் மாணவனாகும். பாடசாலைக்காலத்தில் நூலாசிரியரின் நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இன்றைய தினத்தில் அவருடைய பெற்றோரிடம் உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகத்தை நூலாசிரியர் கி.செ.துரையால் வழங்கப்பட்டது.

இவருடைய நினைவாக நாளை தாயகத்தில் உள்ள 100 உதைபந்தாட்ட வீரர்களுக்கு இந்த நூல் வழங்கப்பட இருக்கிறது.

அகில இலங்கை உதைபந்தாட்டக் குழுவில் இடம் பெறுவதற்கான 23 வயதுக்குக் கீழ்ப்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் ஆட்டம் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் பல்வேறு கழகங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் காலம் சென்ற செல்வன் ஜனுஸ்சன் சிவகுமாரின் ஞாபகார்த்தமாக இந்த நூல் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.

இந்த வீரர்கள் அனைவரும் தமது கனவுகளை நிறைவேற்ற இந்த நூல் உதவும் என்ற குறிக்கோளில் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன முக்கிய உறுப்பினர்கள் பலர் வருகை தருகிறார்கள். அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன பயிற்றுனர் நிஸாம் பகீர் அலியும் பங்கேற்கிறார்.

தாயகத்தில் உதைபந்தாட்டத்தை நேசிக்கும் இளம் வீரர்களுக்கு வழங்கப்படும் இந்த நூல் அவர்களுக்கு பல புதிய தகவல்களை வழங்கும். றொனால்டோ, மெஸி, மரடோனா போல சாதனை வீரர்களாக வரும் கனவுகளை தொட வழிகாட்டும் நூல் என்று பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன முன்னாள் தலைவர் றஞ்சித் றொட்றிக்கோ தமது சிங்கள மொழியில் இது போன்ற நூல்கள் மிகமிகக் குறைவு என்கிறார்.

தமிழர் புலம் பெயர்ந்து, தாயகத்தில் தன்னம்பிக்கையையும் சர்வதேச அறிவையும், நவீன அறிவியலையும் தமது சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்ற பணியை சிறப்பாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த நூல் சிறந்த ஆதாரம் என்றும் கூறுகிறார்.

ரியூப் தமிழ் நிறுவனத்தின் புத்தக சந்தை இந்த நூலை வெளியிட்டுள்ளது. இந்த மூன்று நாட்களுக்கான போட்டிக்கு ஊடக அனுசரணை வழங்குவது ரியுப் தமிழாகும்.

வழங்கப்படும் நூல் ஒரு மகத்தான வீரனையாவது உருவாக்க வேண்டும் உலகப்புகழ் பெற்ற லீக் ஆட்டங்களுக்கு நமது தாயக வீரர்கள் வருவதற்கான வழிகாட்டியாகவும், தன்னப்பிக்கை நூலாகவும் இது இருக்கிறது.

தாயகத்தில் உணவு, உடை போன்ற உதவிகள் அவசியம் அது போலவே சர்வதேச அறிவியலையும் அடையாளம் காட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

சென்ற வாரம் கிளிநொச்சியில் 150 மாணவர்களுக்கு வாசிப்பிற்காக இலவசமாக வழங்கப்பட்டது இந்த நூல்.

புத்தளம் முதல் கல்முனை வரை தொடர்கிறது இந்த நவீன நூல் வழங்கும் பணி.

ஜனுஸ்சன் சிவகுமாரின் பெற்றோர் செய்தது போன்ற கோணத்தில் சிந்திப்பது நல்லது என்பதை தனியாக சொல்லவும் வேண்டுமோ..?

அலைகள் 07.12.2018 வெள்ளி இரவு

Related posts