டத்தோ’ பட்டம் சர்ச்சை: சின்மயி கருத்துக்கு ராதாரவி பதிலடி

டத்தோ’ பட்டம் பொய் என்று சின்மயி தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ராதாரவி பதிலடி கொடுத்துள்ளார்.

பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீ டூ வாயிலாக புகார் தெரிவித்ததிலிருந்து சின்மயியைப் பற்றி ராதாரவி விமர்சிப்பதும் அதற்கு சின்மயி பதிலடி கொடுப்பதும் வழக்கமானதாக இருந்தது. ஒருகட்டத்தில், மீ டூ போச்சு டப்பிங் யூனியன் வந்துச்சு என்கிற கதையாக மாறிப்போனது. வைரமுத்து – சின்மயி விவகாரம் என்பது போய், ராதாரவி – சின்மயி மோதல் என்றானது.

இதனைத் தொடர்ந்து ராதாரவி வைத்திருக்கும் டத்தோ பட்டம் பொய் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் சின்மயி. மேலும், அதற்கான விளக்கங்கள் மற்றும் மெலாகா அரசு தெரிவித்தது ஆகியவற்றையும் வெளியிட்டார்.

இதனால் பெரும் சர்ச்சை உருவானது. ‘டத்தோ’ பட்டம் சர்ச்சைத் தொடர்பாக ராதாரவி கூறியிருப்பதாவது:

வைரமுத்து மீது சொன்ன புகார் எடுபடாமல் போனதால் டத்தோ பட்டம் பொய்யானது என்று என் பக்கம் திரும்பியுள்ளார் சின்மயி. மலேசியாவில் வழங்கப்படும் டத்தோ பட்டங்கள் மதிப்பு மிக்கவை. அங்குள்ள பெடரல் அரசு, சுல்தான்கள், மாநில கவர்னர், ஜூலு பிரிவு உள்ளிட்ட 4 வழிகளில் இவை வழங்கப்பட்டு வருகிறது.

எனக்கான டத்தோ பட்டத்தை சுல்தான் வழங்கினார். அதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. அது பொய் என்று சொல்லி விருது வழங்கியவர்களையே அவமதித்துள்ளார் சின்மயி. இதற்காக நீதிமன்றத்தில் சின்மயி மீது வழக்கு தொடர ஏற்பாடு நடக்கிறது. இந்த வழக்கால் சின்மயி மலேசியாவுக்கு செல்ல தடைவிதிக்கப்படலாம்.

டப்பிங் யூனியனில் இருந்து அவரை நீக்கி விட்டதால் காழ்ப்புணர்ச்சியோடு என்மீது பழி சொல்லி வருகிறார். முதலில் அவரை நீக்கவில்லை. கூட்டத்தில் கண்டனம் தான் தெரிவித்தோம். சின்மயி எந்தவித மிரட்டல் விடுத்தாலும், அதற்கு பயப்படும்  ஆள் நானில்லை. போராட்டங்களிடையே வளர்ந்தவன். டத்தோ பட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவேன்

இவ்வாறு ராதாரவி கூறியுள்ளார்.

Related posts