ஜெயலலிதா மேக்அப்பில் நித்யா மேனன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை சரித்திர படம் தமிழில் உருவாகிறது. இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை உருவாக்கவிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்துக்கான பணிகளை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே பிரியதர்ஷினி அறிவித்திருக்கிறார். இப்படத்துக்கு தி ஐயர்ன் லேடி என பெயரிடப்பட்டிருக்கிறது.

இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இதுபற்றி நித்யா மேனன் கூறும்போது,’சாதனை பெண்மணியான ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது.

அவரது கதாபாத்திரத்தை செய்வது எளிதான காரியம் அல்ல. எனவே, அதற்காக பல்வேறு கடினமான முயற்சிகளை நான் மேற்கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாளான நேற்று ஜெயலலிதா போல் நித்யாமேனன் மேக் அப் அணிந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரியதர்ஷினி வெளியிட்டார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில்,’கருணை கொண்ட மனிதரெல்லாம் கடவுள் வடிவம் ஆகும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக பட தரப்பு தெரிவிக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷினி டைரக்டர் மிஷ்கினிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.

நித்யாமேனன் கெட்டப் ஸ்டில் குறித்து கமென்ட் பகிர்ந்திருக்கும் ரசிகர்கள், இது நித்யாமேனனின் மேக் அப் ஸ்டில்போல் இருப்பதற்கு பதிலாக நித்யாமேனன் படத்தை ஜெயலலிதாபோல் கம்ப்யூட்டரில் மாற்றி அமைத்ததுபோல் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

Related posts