சாவித்திரி பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் கடிதம்

சாவித்திரி பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சியுடன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகை, இயக்குநர், தயாரிப்பாளரான சாவித்திரி பிறந்த தினம் இன்று (டிசம்பர் 6). ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்டார்.

இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவான படம் ‘மஹாநடி’. இதில் சாவித்திரியாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார் கீர்த்தி சுரேஷ். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, அங்கும் வரவேற்பைப் பெற்றது.நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இன்று (டிசம்பர் 6) சாவித்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில் அவர் கூறியுள்ளதாவது:

இது உங்களுக்காக. என்றும் எப்போதும் நினைவிலிருக்கும் ஒரு சகாப்தம். நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்கள். உங்கள் அன்பும், ஆசியும் தந்து அரவணைத்தீர்கள்.

எல்லையைக் கடந்து நாங்கள் இங்கு வந்து சேரத் தேவையான சக்தியைக் கொடுத்தீர்கள். எங்களுக்குக் கிடைத்த அனைத்துக்கும் நாங்கள் தகுதியானவர்கள் தான் என்று எங்களை உணரவைத்தீர்கள்.

உங்களை சந்தோஷப்படுத்தியுள்ளோம் என்று நம்புகிறேன். ‘மஹாநடி’ / ‘நடிகையர் திலகம்’ உங்களை மீண்டும் உயிர்ப்பெறச் செய்ய கிடைத்த தளம். உங்களுக்கான நியாயத்தைச் செய்தோம் என நம்புகிறோம். எங்களால் முடிந்த சிறந்த முயற்சிகளை செய்தோம். உங்களுக்கு என்றும் நிகரில்லை.

நீங்கள் எங்கள் வாழ்க்கையை மாற்றினீர்கள், என் வாழ்க்கையை மாற்றினீர்கள். நன்றி. பிறந்தநாள் வாழ்த்துகள் சாவித்திரிமா

அன்புடன்

’மஹாநடி’ படக்குழு

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Related posts