‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி தோற்றம் வெளியானது

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து அவர் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் மீது ரசிகர்கள் பார்வை திரும்பி உள்ளது.

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்துள்ளார். ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ‘பார்க்கத்தான் போற இந்த காளியோட ஆட்டத்தை, எவண்டா கீழ எவண்டா மேல எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. அதிக எண்ணிக்கையில் கேட்டு உள்ளனர்.

விஜய் சேதுபதி தோற்றம் :

இதற்கிடையில், இந்த பாடலை படநிறுவனம் வெளியிடும் முன்பே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு முன்பு படங்கள்தான் திரைக்கு வரும்போதே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி வந்தது. இப்போது பாடலும் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், பேட்ட படத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் தோற்றத்தை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். அதில் விஜய் சேதுபதி கையில் துப்பாக்கியுடன் குரூர தோற்றத்தில் இருக்கிறார்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்துவதுபோல் விஜய் சேதுபதி தோற்றம் இருந்தது.

Related posts