அரசியலமைப்பிற்கு அமைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்

நாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், சட்ட ரீதியான அரசாங்கத்தை உருவாக்கிப் பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் நேற்று (04) அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

நாட்டில் இன்று சட்ட ரீதியான அரசாங்கமொன்றை அமைக்கவேண்டியதே முதலில் செய்ய வேண்டிய பணியாகும். அதன் பின்னர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்வாங்கி, தேர்தலொன்றை நடத்துவதற்கான யோசனையொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் நடைமுறையாகும்.

உரிய காலத்துக்கு முன்பதாக தேர்தலை நடத்துவதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, 2019இல் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியும் கோரியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியன வழங்கிய தீர்ப்புகளை நாங்கள் மதிக்கின்றோம்.

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தைப்போன்று எமது நீதிமன்றமும் சுயாதீனத்தன்மையுடன் செயற்படுகின்றது.

2015இல் நல்லாட்சியை உருவாக்கி நீதித்துறையின் செயற்பாட்டைச் சுயாதீனமாக்கியதுடன் அதற்கென சுயாதீன ஆணைக்குழுவையும் அமைத்து நாட்டின் அரசியலமைப்பைப் பலப்படுத்தினோம். நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாச, உப தலைவர் ரவி கருணாநாயக்க, டாக்டர் ராஜித்த சேனாரத்ன, றிஷாத் பதியுதீன், லக்‌ஷ்மன் கிரியெல்ல, பழனி திகாம்பரம் ஆகியோருடன் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related posts