மிசேல் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு படைத்தது புதிய சாதனை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பாரியார் மிசேல் ஒபாமா எழுதியுள்ள எனது வரலாறு என்ற அவருடைய சுயசரிதை நூல் இன்று ஐரோப்பிய புத்தகச் சந்தைக்கு வருகிறது.

இந்தப் புத்தகம் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாழ்ந்த வரலாறு கொண்ட அதிபர்களும், முதற் பெண்மணிகளும் எழுதிய புத்தகங்களின் விற்பனைகளை எல்லாம் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த நவம்பர் 13ம் திகதி வெளியான இந்த நூல் வெறும் இரண்டே வாரங்களில் அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளின் புத்தக சந்தைகளில் இரண்டு மில்லியன்கள் புத்தகங்கள் விற்பனையாகியிருக்கிறது.

முதற்தடவையாக மொத்தம் 34 லட்சம் பிரதிகள் அச்சாகியிருக்கின்றன. அத்தோடு ஈ.புக் எனப்படும் மின் புத்தகம், ஒலிப்புத்தகம் ஆகிய மூன்று வடிவங்களில் வெளியாகியிருக்கிறது. இன்று அடுத்த தொகுதி புத்தகங்கள் இங்கிலாந்து புத்தகச் சந்தைக்கு வருகின்றன. நாளை பாரீஸ் என்று அடுத்த சுற்று வியாபகம் பெற இருக்கிறது.

இதுபோல முன்னாள் வெள்ளை மாளிகையின் முதல் பெண்மணி கிலரி கிளிண்டன் 2003 ல் எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்று முடிய ஒரு மாதங்கள் ஆகியிருந்தன. ஆனால் இவரோ இரண்டே வாரங்களில் இரண்டு மில்லியன்களை தொட்டிருக்கிறார். இது புத்தக விற்பனை சந்தையில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுபோல முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ் எழுதிய டிஸ்சிசன் போயின்ற்ஸ் என்ற புத்தகம் இரண்டு மில்லியன்களை எட்டித்தொட பல வாரங்கள் எடுத்திருந்தன.

இதுபோல முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் எழுதிய எனது வரலாறு என்ற புத்தகம் ஒரு மில்லியன்கள் விற்று முடிய மிக மிக நீண்ட காலம் எடுத்தது. இவர்களை எல்லாம் ஒரு கறுப்பின பெண்மணி தனது எழுத்தால் முறியடிக்கக் காரணம் என்ன..?

இவரிடம் கேட்கப்பட்ட முதலாவது கேள்வி 2020 ல் வரவுள்ள அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ரம்புடன் போட்டி போடுவீர்களா..? என்பதுதான் இதற்கு அவர் தெளிவான பதிலை வழங்கியிருக்கிறார். எக்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் அது எனது நோக்கமல்ல என்று தெளிவுபடக் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.

அத்தோடு சிறந்த பிள்ளை வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், தற்போதைய அதிபரின் பெண்கள் வெறுப்புப் போக்கு ஆகியவற்றைப்பற்றி மிக விபரமாக எழுதி பெண்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

ஒரு தேநீர்க்கடையிலேயே கறுப்பர்கள் வெள்ளையருடன் சமமாக இருந்து தேநீர் அருந்த முடியாத நிறத்துவேஷம் இருந்த ஒரு நாட்டில், சாதாரண உரிமை கேட்ட கறுப்பரான மாட்டின் லூதர் கிங் யூனியரை சுட்டுத்தள்ளிய நாட்டில் ஒரு கறுப்பர் அதிபராவது கனவில் கூட நடக்க முடியுமா..? என்பது கனவிலும் கேட்கப்பட முடியாத கேள்வியாக இருந்தது. அத்தகைய ஒரு நாட்டில் முதலாவது கறுப்பின அதிபர் ஒருவர் வெள்ளை மாளிகை போனாரென்றால் அதற்கு பின்னால் இருந்த சக்தி மிசேல் ஒபாமா என்று பெண்தான்.

இவரால் எப்படி முடிந்தது, இதுதான் பெண்கள் மத்தியில் ஆவலைத்தூண்டிய முதற் கேள்வியாகும்.

பொதுவாக அதிபர் பதவியில் இருக்கும் காலத்தில் பல அதிபர்கள் பாலியல் சிக்கல்களில் சிக்குப்படுவது வழமை. இப்போதைய அதிபர் மீது பல பெண்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். ஆனால் தனது கணவரான பராக் ஒபாமா யாதொரு களங்கமும் இல்லாமல் பதவிக்காலத்தை நிறைவு செய்து வெளியேற ஆதார சக்தியாக இருந்தது எப்படியென்பதை அதிகமான குடும்பத்தலைவிகள் அறிய முயல்கிறார்கள்.

தனது குடும்ப வாழ்விற்குள் இன்னொரு பெண் குறுக்கிடாமல் இருப்பதையே குடும்பத் தலைவிகள் விரும்புகிறார்கள். அதற்கான வழிகாட்டல்கள் இந்த நூலில் நிறையவே இருக்கிறது. இந்த விவகாரத்தில் அடைந்த தோல்வியே கிலரி கிளிண்டனை பெண்கள் வெறுக்க முக்கிய காரணமாக இருந்தது. பில் கிளிண்டனால் ஏமாற்றப்பட்ட மொனிக்கா லுவின்ஸ்க்கி என்ற பெண்ணுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டதே கிலரி கிளிண்டன்தான். அதனால் வெள்ளை மாளிகையின் முதல் பெண் என்ற வாய்ப்பையே பறி கொடுத்தார். ஆகவேதான் மிசேல் ஒபாமா கவனத்தை தொடும் பெண்ணாகிறார்.

மேலும் இப்போதைய அதிபரின் மனைவியான மெலனியா ரம்ப் பதவிக்காலம் முடிய அதிபரை விவாகரத்து செய்ய காத்திருக்கிறார். அவர் அதிபருடன் ஒரே கட்டிலில் கூட படுப்பதில்லை என்று புதிய புத்தகம் ஒன்று கூறுகிறது. இவர்களுடன் ஒப்பிட்டால் மிசேல் ஒபாமா சாதனை மிக்க குடும்பப் பெண்ணே.

முன்னாள் அதிபர் ஒபாமா எடுத்த பெரும்பாலான முடிவுகள் மிசேல் ஒபாமாவின் முடிவுகளே என்கிறார்கள். உண்மையில் ஒபாமா என்பவர் தற்றுணிபு இல்லாத தகுதி குறைந்த ஒரு தலைவரே..! அவரைவிட எத்தனையோ மடங்கு கூரிய அறிவுள்ள பெண்மணியே மிசேல் ஒபாமா என்று அமெரிக்க ஊடகங்கள் பல தடவைகள் எழுதியுள்ளன.

முன்னொரு தடவை அறிஞர் அண்ணா சொன்னார், வறுமையை வெல்ல ஒவ்வொரு குடும்பமும் வீட்டுத் தோட்டத்தை வைக்க வேண்டும் என்று. இவர் அண்ணா போல் சொல்லவில்லை செய்து காட்டினார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் மிகவும் புதிய வீட்டுத் தோட்டத்தை அமைத்துள்ளார். இனி வரும் முதற் பெண்மணிகளுக்கு அதை பராமரிக்கும் பணியை விட்டுச் சென்றுள்ளார். இன்று இரசாயனத்தால் சீரழிக்கப்பட்ட மரக்கறிகளில் இருந்து விடுபட ஒவ்வொரு பெண்ணும் வீட்டுத் தோட்டத்தை வளர்க்க வேண்டும் என்கிறார்.

பிள்ளை வளர்ப்பில் முக்கிய விடயம் ஆரோக்கிய உணவாகும். பாடசாலை கேன்டீன்களில் சரியான உணவை வழங்க வேண்டும். அதற்காக அமெரிக்க பாடசாலைகள் முழுவதுமுள்ள கேன்டீன்களின் உணவுத்தரத்தை மாற்றியமைக்க பாடுபட்ட தனது புதுமைச் சிந்தனைகளை விளக்குகிறார்.

2016 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் கிலரி கிளிண்டன் தோல்வியடைய ரஸ்யாவின் பின்னணி சூழ்ச்சிகள் மட்டும் காரணமல்ல, அமெரிக்க பெண்களே ஒரு பெண் வெள்ளை மாளிகை வருவதை விரும்பவில்லை என்று கூறி, பெண்ணுக்கு பெண் எதிரியாக இருக்கும் அமெரிக்கப் பெண்களின் பொறாமைக் குணத்தையும் ஆச்சரியமாக நோக்குகிறார்.

எனக்கு அதிபர் பதவி ஆசை இல்லை.. என்னை முதலாவது பெண்மணி என்று அழைக்காதீர்கள் என்று கூறி, ஒரு புதிய வாழ்வை உலகிற்கு அறிமுகம் செய்த அமைதியான இந்தப் புரட்சிப் பெண்மணியின் வரலாற்றை அறிய ஒவ்வொரு பெண்களும் நாட்டம் கொள்வது புதுமையல்ல.

ஒரு கறுப்பின பெண்மணி என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிய பெண்களுக்கு நாட்டம் அதிகம்.. சீறிப்பாய்கிறது புத்தக விற்பனை. இதுபோல பிரான்சிய அதிபரை மணமுடித்து அவரை இயக்கிக் கொண்டிருக்கிறார் அவரைவிட 24 வயது அதிகமுள்ள பியகீற் என்ற அவருடைய முன்னாள் இலக்கிய ஆசிரியை அவருடைய கதையும் மிகவும் சுவாரஸ்யமானதே.

அலைகள் 04.12.2018

Related posts