சீனா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் மூன்று மாதங்கள் ஒத்திவைப்பு

சீனா அமெரிக்கா நாடுகளின் அதிபர்கள் ஆர்ஜண்டீனா தலைநகர் புவனஸ் அயரஸ்சில் நேற்று முன்தினம் சந்தித்து பேசி வர்த்தகப் போர் பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வை கண்டுள்ளார்கள்.

அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போரில் மிகப்பெரும் வலிகளை சுமந்தது சீனாதான். ஆகவேதான் அமெரிக்காவின் கார்களுக்கு 40 வீதம் வரி விதித்து வர்த்தக முடக்கத்தை ஏற்படுத்தியது.

இப்போது கடந்த சனிக்கிழமை ஜி 20 நாடுகளின் மாநாட்டின் மதிய இடைவேளையை பயன்படுத்திப் பேசிய இரு தலைவர்களும் வர்த்தகப் போரை சரியான ஒரு தீர்மானம் இயற்றும்வரை சுமார் மூன்று மாதங்கள் பின் போட முடிவு செய்துள்ளனர்.

வரும் தை மாதம் முதல் சீனாவின் 200 பில்லியன் டாலர்கள் பெறுமதியான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு டொனால்ட் ரம்ப் 25 வீதம் வரிகளை விதிக்க இருந்தார். இது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 200 பில்லியன் டாலர் பெறுமதியான பொருட்களுக்கான வரியைவிட மேலதிகமான அடுத்த சுற்று புதிய ஏட்டிக்கு போட்டி வரியாகும்.

இந்த தேவையற்ற புதிய வரிகளை அமெரிக்கா நிறுத்தினால் சீனா என்ன நன்மையை செய்யும் என்ற கேள்விக்கு சீன அதிபர் கொடுத்த பதில்..

அமெரிக்காவின் விவசாய பொருட்கள், சக்தி வள உற்பத்திகள், தொழிற்சாலை உற்பத்திகளை இப்போது வாங்கும் தொகையை விட அதிக தொகைக்கு வாங்க தயார் என்று எடுத்து வீசியிருக்கிறார்.

இதனால் மனம் குளிர்ந்த அமெரிக்க அதிபர் சுயநலமும் தந்திரமும் மிக்க சீனர்களுக்கு முழந்தாளிட்டு சலாம் போட்டுள்ளார் என்று ஐரோப்பிய ஊடகங்கள் எழுதியுள்ளன.

இப்படி தேவையற்ற வரியை விதித்து மடைத்தனமான வேலை செய்வதில் யாருக்கும் பயனில்லை என்று சீன அதிபர் கொடுத்த கடுமையான எச்சரிக்கைக்கு அமெரிக்கா பணிந்துள்ளது. ஆனாலும் இந்த மாற்றம் ஐரோப்பாவிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் அமெரிக்காவுடன் மோதிக்கொண்டு, ஐரோப்பாவிடமிருந்து இறக்குமதி செய்யவிருந்த அதே பொருட்களையே இப்போது மடை மாற்றி அமெரிக்காவிடமிருந்து சீனா இறக்குமதி செய்யப் போகிறது. இதனால் ஐரோப்பாவின் வயிற்றில் இரண்டு நாடுகளும் ஓங்காளம் எடுக்குமளவுக்கு ஓங்கிக் குத்தியுள்ளன.

இவர்கள் இப்படி ஒரு தீர்மானத்திற்கு வர, நவீன நெப்போலியன் என்று கனவு காணும் பிரான்சிய அதிபரோ அங்கு வந்த சவுதி இளவரசர் முகமட் பின் சல்மானை நெப்போலியன் பாணியில் காய்ச்சி எடுத்திருக்கிறார்.

சில மாதங்களின் முன் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமால் காஸ்கோக்கி விவகாரத்தில் சர்வதேச விசாரணைகள் வேண்டும். சவுதி நடத்தும் உள்ளக விசாரணைகளை ஏற்க முடியாது என்று சீறியுள்ளார்.

அடுத்ததாக ஏமன் நாட்டின் மீது சவுதி இனியும் குண்டுகளை வீசி சன்னத ஆட்டம் ஆட முடியாது பிரச்சனையை முறைப்படி பேசியே தீர்க்க வேண்டும் என்றுள்ளார். அவரை பொறுத்தவரை ஜமால் காஸ்கோக்கியை கொல்லும்படி உத்தரவிட்டது சவுதி இளவரசரே என்று சந்தேகப்படுகிறார்.

இரண்டுமே சவுதிக்கு வேம்பாக கசக்கும் விடயங்களே.

மாறாக மாநாடு வந்த சவுதி இளவரசருடன் ரஸ்ய அதிபரும், இந்திய பிரதமரும் கொஞ்சிக்குலாவி பேசியுள்ளனர். மேலை நாடுகள் ஆயுதம் வழங்காவிட்டால் என்னடா செல்லம் நான் இருக்கிறேன் என்றுள்ளார் ரஸ்ய அதிபர்.

சவுதியின் ஓயிலை மற்ற நாடுகள் குடிக்க மறுத்தால் போகட்டும் நாம் எதற்கடா இருக்கிறோம் கண்ணா ? லிபியாவிலும், ஈராக்கிலும் இதுபோல பிரச்சனை வர நாம் உவியாத உவியலா என்றவாறு இந்திய பிரதமர் பேசியிருக்க வாய்ப்புள்ளதை வெளியான புகைப்படத்தின் உடல் மொழி காட்டுகிறது. சவுதியின் கரசின் ஆயில் இந்தியாவில் கிருஷ்ணா ஆயிலாக மாறிய புதுமையை கேட்டவர் போல நரேந்திரமோடி அருகே சவுதி இளவரசர் ஆனந்தமாக இருந்தார்.

சவுதி இளவரசருக்கு பணிந்து போவதைவிட மிரட்டினால் அதிக வர்த்தகம் வருமென்ற எமானுவல் மக்ரொங்கின் யோசனை சிறந்ததா..? இல்லை அவரை பப்பாசியில் ஏற்றி தறித்து வீழ்த்தப் போகும் ரஸ்யாவின் யோசனை சிறந்ததா..? இப்படி பட்டி மன்றம் நடத்தி சதாம் உசேனை பலிக்கடவாக்கி தூக்கிலிட்ட கதை இளங்கன்றான சவுதி மன்னருக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை.

பசுக்கன்றை தேர்க்காலால் கொன்ற இளவரசனாக இவரும், மனு நீதி கண்ட நோழனாக வயதான சவுதி மன்னரும் இருக்கிறார்கள்.

பாவம் ஊடகவியலாளர் ஜமால் காஸ்கோக்கி மரணத்தைத் தவிர அவர் கண்ட இலாபம் வேறு எதுவும் இல்லை. இவர்களை நம்பினால் பரலோக யாத்திரைதான் பரிசாககக் கிடைக்கும் என்பதை அவர் சொல்லத்தான் நினைக்கிறார் உள்ளத்தால் துடிக்கிறார்.. வாயிருந்தும் சொல்வதற்கு வார்தையின்றி தவிக்க வாய்ப்புள்ளது.

அலைகள் 03.12.2018 திங்கள்

Related posts