எச்.டபிள்யூ புஸ்சின் பூதவுடலுக்கு எயாபோஸ் – 1 ல் உயர் மரியாதை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சின் தந்தையான முந்திய அமெரிக்க அதிபர் எச்.டபிள்யூ புஸ் கடந்த வெள்ளி ரெக்சாஸ் ஹவுஸ்ரனில் உள்ள அவருடைய வீட்டில் மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 94.

இவருடைய இறுதிக்கிரியை நிகழ்விற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பும் பாரியாரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி நாட்டின் கொடிக்கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், அரச கட்டிடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இறந்த முன்னாள் அதிபருக்கு அதி உயர் அரச மரியாதை வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.

முன்னாள் அதிபரின் பூதவுடல் டெக்சாசில் இருந்து வோஷிங்டனுக்கு அமெரிக்க விமானப்படையின் எயார் போஸ் வண் விமானத்தில் மரியாதையுடன் எடுத்து வரப்படும் என்றும் கூறியிருக்கிறார். எயார் போஸ் வண் பொதுவாக பதவியில் இருக்கும் அதிபர் பயணிக்கும் விமானமாகும்.

ஜேர்ஜ் புஸ்சின் குடும்பத்தினருக்கும் இப்போதைய அதிபர் டொனால்ட் ரம்பிற்கும் இடையே 2016 தேர்தல் காலத்தில் பலத்த முரண்பாடுகள் காணப்பட்டன. ஆரம்ப கட்ட தேர்தலில் இறந்த புஸ்சினுடைய கடைசி மகன் யெப் புஸ் போட்டியிட்டு டொனால்ட் ரம்பிடம் தோல்வியடைந்தது தெரிந்ததே.

மேலும் கோபமடைந்த ரம்ப் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சின் தரங்கெட்ட ஆட்சியை கடுமையாக விமர்சித்ததும், இதனால் புஸ் குடும்பத்திற்கும் ரம்ப்பிற்கும் இடையே பகை வளர்ந்ததும் அடுத்த கதை. ஒரே கட்சியாக இருந்தாலும் தேர்தலில் டொனால்ட் ரம்பிற்கு தாம் வாக்களிக்க மாட்டோம் என்றும் புஸ் குடும்பம் கூறியிருந்தது.

இதன் உச்சக்கட்டமாக றிப்பப்ளிக்கன் கட்சி செனட்டர் ஜோன் மக்கெய்ன் மரணித்த போது டொனால்ட் ரம்ப் தனது இறுதி கிரியைகளுக்கே வரக்கூடாது என்று கூறியிருந்தார். அந்த வகையில் இதில் சிறிய மாற்றம் அதிபருடன் சமரசம் ஏற்பட்டுள்ளது.

காலம் சென்ற எச்.டபிள்யூ புஸ் முன்னர் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் அமெரிக்க விமானப்படை விமானியாக பணியாற்றியவர். போர் வீரரான இவர் பின்னர் பிரதிநிதிகள் சபையில் இடம் பெற்றிருந்தார். அடுத்து சி.ஐ.ஏ டிரக்கடராக இருந்தார். தொடர்ந்து டொனால்ட் றேகன் அதிபராக இருந்த இரண்டு பருவங்களிலும் உப அதிபராகவும் இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அத்தருணம் டொனால்ட் றேகனின் புகழ் பெற்ற கொள்கையையே தானும் கடைப்பிடிப்பதாக தெரிவித்து வெற்றி பெற்றார். பொதுவாக ஓர் அதிபர் இரண்டு பருவங்கள் ஆட்சியில் இருந்தால் அதற்கு அடுத்து மற்றைய கட்சியே ஆட்சிக்கு வருவது வழமை. இவர் அந்த நிலையை மாற்றியமைத்தார் தனது வெற்றி மூலமாக.

இவருடைய காலம் சோவியத் ரஸ்யாவுடனான பனிப்போர் முடிவுக்காலமாகும் பேர்ளின் சுவர் 1986 உடைக்கப்பட 1989ம் ஆண்டு அமெரிக்காவின் 41 வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இவருடைய காலத்தில் முதலாவது வளைகுடா போர் ஆரம்பித்தது. 1990 ம் ஆண்டு அமெரிக்காவின் கையாளாக இருந்த சதாம் உசேன் பின்னர் எதிரியாக மாறி, குவைத்திற்குள் நுழைந்து எண்ணெய் வயல்களை தீயிட்டபோது வளைகுடா போரை தொடுத்தார். அந்தப் போரில் சதாம் முற்றாக தோற்கடிக்கப்படவில்லை, ஆனாலும் அமெரிக்காவிற்கு அது வெற்றியாக அமைந்தது.

அந்த நேரத்திலேயே வயோதிபம் இவருடைய கதவை தட்ட ஆரம்பித்திருந்தது. பல தடவைகள் இவர் திடீர் திடீரென கீழே விழ ஆரம்பித்தார். அடுத்து வந்த தேர்தலில் பில் கிளிண்டனிடம் தோல்வியடைந்து இரண்டாவது பருவத்தை தொடாமலே பதவியில் இருந்து விலகினார்.

இதனால் ஈராக்குடன் எஞ்சியிருந்த போரை அவரால் முற்றாக முடிக்கவில்லை. இருப்பினும் வளைகுடா போர் காரணமாக உலக எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டு அந்தப் போரால் முழு உலகமுமே பாதிப்பிற்குள்ளானது. அதற்கு இவரே காரணம்.

இருப்பினும் இவர் தன்னுடைய மகனையும் அமெரிக்க அதிபராக்கி தான் தொடுத்த ஈராக் போரை வெற்றி கெண்டு, பழைய பழிக்கு பழி மங்கம்மா சபதம் போல சதாம் உசேனையும் தூக்கில் போட்டு சபதம் முடித்திருந்தார்.

அமெரிக்க வரலாற்றில் இவர் காலம் எப்படிப்பட்டது என்று கேட்டால் இவரும் இவருடைய மகன் புஸ்சும் வளைகுடா போரில் சம்மந்தப்பட்டவர்கள். இந்தப் போர் உலகத்திற்கு துயரமாகவும் அமெரிக்காவிற்கு இலாபமாகவும் அமைந்தது.

ஆகவே இவர் அமெரிக்காவினால் போற்றுதலுக்குரிய தலைவராக நோக்கப்படுகிறார். இலட்சோப இலட்சம் மக்களின் மரணங்களை மண் மூடி மறைத்து இவரை போற்றினால் வரலாறு களங்கப்பட்டுவிடும் என்பதை சொல்லவும் வேண்டுமோ..?

அலைகள் 02.12.2018

Related posts