போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் ரியூப்தமிழ் புத்தகங்கள்

நேற்று கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய பரிசளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ரியூப் தமிழ் நிறுவனம் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கி, நிகழ்வை உலக மன்றுக்கு இணையவழி வழங்கியது. அத்தோடு இதற்கான சான்றிதழ்களை, உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகத்துடன் இணைத்தும் வழங்கி மாணவர்களுக்கு உற்சாகமூட்டியது.

மேலும் வருகை தந்த பெற்றோருக்கு ரியூப் தமிழ் பத்திரிகைகளை இலவசமாக வழங்கும் நிகழ்வும் சிறப்போடு இடம் பெற்றது.

போரினால் பாதிக்கப்பட்டு யாருமே கவனிக்காது விடப்பட்டுள்ள தாயகப் பகுதிகள் எவை என்று கேட்டீர்களானால் அதுகுறித்து வழங்க கைநிறைய ஆதாரங்கள் உள்ளன.

யாருக்கு எதைச் செய்வது எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது ஒரு பெரிய கேள்விதான்.

ஆனால் எதைச் செய்ய முயன்றாலும் உள்ளத்தில் ஒரு கேள்வி எழும். நமது தாயகம் இந்த நிலைக்கு போனதற்கு முக்கியமான காரணம் என்ன..? என்ற கேள்விதான் அது.. பாடசாலைக் கல்வியறிவானது உலகளாவிய பரந்த அளவில் வளர்க்கப்படாமையே பல பின்னடைவுகளுக்கு காரணம் என்பது தெரியவரும்.

அன்று போர்க்காலத்தில், மின்சாரத்தடை, உணவுத்தடை, மருந்துத்தடை என்று ஏராளம் தடைகள் போடப்பட்ட காரணத்தினால், பல தசாப்தங்களாக மாணவர்கள் சர்வதேச தகவல்களை பெற முடியாத செயற்கையான முடக்கு வாதம் ஒன்று நமது சமுதாயத்தின் மீது விழுந்தது.

அன்று அதை நாம் வெகு சாதாரணமாக நினைத்தோம்.. ஆனால் இன்றோ அது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது..

இதனால் இப்போது உருவாகியுள்ள பாதிப்புக்கள் எவை..?

போதை வஸ்த்து, இளவயதுத் திருமணம், வன்முறை, தற்கொலை, மதுபானம், எல்லாவற்றையும் விட வறுமை என்பன தலைவிரித்தாடுகின்றன.

இந்த நிலையில் நவீன நூல்களை தேடிப்படிக்கத்தான் முடியுமா..? பணம் இருந்தாலும் இலங்கை புத்தகக் கடைகளும் தரமான, சமூகத்திற்கு தேவையான நூல் விற்பனையை ஊக்குவிக்கவில்லை.

இதனால்…

தாயக பாடசாலைகளை அறிவியல் மேன்மைப் படுத்தவும், போர் நடந்த பகுதிகளின் சிறார்களுக்கு சர்வதேசத்தின் இன்றைய நவீன வெற்றிச் சிந்தனைகளை அறியக் கொடுப்பதிலும் பெரும் பின்னடைவு காணப்படுகிறது. இதை நிரவல் செய்ய ரியூப் தமிழ் புத்தகச் சந்தை முனைப்பாக இறங்கியிருக்கிறது.

அந்த வகையில் கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய பரிசளிப்பு விழாவில் தனது புது முயற்சியையும் சிறப்பாக முன்னெடுத்தது. நேற்று 30ம் தகதி நவம்பர் பாடசாலை மண்டபத்தில் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவின் அருட்திரு. துரைரட்ணம் அடிகளார், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேளமாலீலன் ஆகியோர் தலைமையில் ஆரம்பித்தது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபையால் அமைத்துக் கொடுக்கப்பட்ட பாடசாலையின் புதிய மண்டபத்தையும் பிரதம விருந்தினர் திறந்து வைத்தார்.

இசை, நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தேறின. சுமார் 500 வரையான பிள்ளைகளும் பெற்றோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வின் உயிர் நாடியாக பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம் பெற்றது. பிள்ளைகளையும் பெற்றோரையும் உற்சாகப்படுத்தும் இது போன்ற நிகழ்வுகள் முன்னைய காலங்களில் இலங்கை பாடசாலைகளில் பெருமெடுப்பில் இருக்கவில்லை. அந்தவகையில் இது ஒரு முன்னேற்றம் என்றே கூற வேண்டும்.

அதிகமான ஆசிரியர்கள் அடிப்பதும், குறை கூறுவதுமாக காலம் ஓட்டியதால் உளவியல் பின்தங்கிய தடத்தில் பெரும்பாலான பாடசாலைகள் சென்றன. இது ஒரு சமுதாய சீரழிவிற்கு காரணமாகி, நாடு முழுவதையும் போருக்குள் வீழ்த்தும் நம்பிக்கை வரட்சி உளவியலை ஏற்படுத்தியது. இது சிங்கள, தமிழ், முஸ்லீம் பாடசாலைகள் என்ற பேதமில்லாமல் சகல இனங்களிலும் உருவாகின. ஆகவேதான் பரந்த அறிவை வளர்ப்பதில் பாடசாலைகளின் தோல்வி ஒரு பாரிய பிரச்சனையாக இருந்தது என்றனர் அறிஞர். ஐ.நாவும் இதை கூறியிருக்கிறது.

சமீபத்தில் கூட ஓர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை சென்று பார்த்தபோது, அங்கு ஆசிரிய மாணவர்களுக்கு படிப்பித்தவிதமும், அதன் விரிவுரையாளரின் அறிவுத்தரமும் சர்வதேச தரத்திற்கு வெகு தொலைவிலேயே இருந்ததை காணமுடிந்தது.

மேலும் யாழ்ப்பாணத்தின் கவர்னரின் புகைப்படத்தை காட்டி இவரை தெரியுமா என்று ஒரு தொகுதி இளைஞர்களிடம் கேட்டபோது பத்து வீதம் கூட அவரை அறிந்திருக்கவில்லை என்பது அதிர்ச்சி தந்தது.

முகநூல், யூருப், கூகுள் யாவும் பாடசாலைகளில் எழுத்து மூலமான படிப்பாகவே இருக்கிறதே அல்லாமல் அவை பரீட்சார்த்த பாவனையாக இல்லை.

உணவு இல்லை, வேலை இல்லை என்பதெல்லாம் உண்மையே.. ஆயினும் அறிவியல் மீட்சியே அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை மறுக்க முடியவில்லை.

அனைத்து அவலங்களில் இருந்தும் சமுதாயத்தை மீட்கவேண்டுமானால் அப்பணியை பாடசாலை மட்டங்களில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இந்த நோக்கில் பத்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் நூல்களை வழங்கும் அழகிய திட்டத்தை ரியூப்தமிழ் ஆரம்பித்து வைத்துள்ளது.

ரியூப் தமிழால் வழங்கப்பட்ட புத்தகங்கள் இனி வாரம் தோறும் பாடவாலையில் தன்னம்பிக்கை சிந்தனையாக வாசிக்கப்பட இருக்கிறது.

இதுபோல தொடர் வாசிப்புக்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தருணம் வருகை தந்திருந்த பெற்றோர்களுக்கு ரியூப் தமிழ் வாராந்த பத்திரிகையும் இலவசமாக வழங்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நற்சாட்சிப் பத்திரங்களையும் ரியூப்தமிழே வழங்கியிருந்தது. விழா ரியூப்தமிழினால் நேரடி ஒளி, ஒலிபரப்பும் செய்யப்பட்டது.

எத்தனையோ பாரிய ஊடகங்கள் எல்லாம் இருந்தாலும் ரியூப்தமிழ் போரினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரதேச பாடசாலைகளை தேடி வந்து, இவ்வளவு கவனமெடுத்தது பணியாற்றுவது பாராட்டப்பட வேண்டிய விடயம் என்று அதிபர் புகழாரம் சூட்டினார்.

நல்லதே செய்வோம்.. தடைகள் உடைகின்றன..

அலைகள் 01.12.2018 சனிக்கிழமை

Related posts