2.0 படம்: தமிழ் ராக்கர்ஸ்-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளம், தன்னுடைய இணைய தள முகவரியில் உள்ள எழுத்துகளை மாற்றம் செய்து தொடர்ச்சியாக புதிய படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புதிய திரைப்படங்களை இணைய தளங்களில் வெளியிட கூடாது என பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அந்த உத்தரவை சுட்டிக்காட்டியே ‘தமிழ் ராக்கர்ஸ்’ சவால் விட்டு புதிய படங்களை வெளியிட்டு விடுவதாக லைகா நிறுவனம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதி, இணைய தள முகவரியில் மாற்றம் செய்து தமிழ் ராக்கர்ஸ்’க்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிட தடை விதித்து இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

Related posts