இந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வின் தார்மீக நியாயங்கள் என்ன..?

கார்த்திகை 27 வரும் மாவீரர் நாள் இந்த ஆண்டும் தாயகம் முதல் உலக நாடுகள் எங்கும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்படுகிறது.

வழமையாக தமிழீழ தேசியத் தலைவர் வழங்கும் மாவீரர்நாள் உரையை உலக நாடுகளில் ஒளிபரப்பு செய்து அது தொடர்பான அலசல்கள் நடைபெறும் கருப்பொருளான நிகழ்வு இல்லாமல் போய் இத்தோடு பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

ஆனாலும் போரில் வீரமரணம் அடைந்தோரை அஞ்சலிக்கும் நிகழ்வின் வீரியம் குறைந்ததாகக் கூறிவிட முடியவில்லை. எத்தனையோ தடைகள் இருந்தும், அரசின் சட்ட மூலமான தடை அறிவிப்பு இருந்தும் இலங்கையில் மாவீரர் நிகழ்வு உணர்வுடன் நடைபெறுகிறது. அதுபோல புலிகள் தடை செய்யப்பட்டதாக கூறப்படும் நாடுகளில் எல்லாம் வழமை போலவே நடைபெறுகிறது.

தமிழர் மத்தியில் இந்த நாளை அதே எழுச்சியுடன் நடத்த வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. காரணம் இந்த நிமிடம் வரை அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்ற தார்மீக கோபம் அவர்களிடம் இருக்கிறது. போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கமானது பத்தாண்டுகள் ஆகியும் நிறைவு செய்யப்படாத வெற்றிடமே நிலவுகிறது.

தனி நாடு கேட்ட மக்கள் தாம் வாழ்ந்த காணிகளையே இழந்து நிற்பது அவர்களின் கோபத்தின் முக்கிய காரணம் என்கிறார்கள்.

சரணடைந்தால் பொது மன்னிப்பும் சிறந்த வாழ்வும் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை நம்பி வந்தோம் ஆனால் வழமைபோல உலக நாடுகள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இன்றும் பலரது சிறைவாழ்வு தொடர்கிறது.

12.000 போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் , அவர்களுடைய அரசியல் சமுதாய பொருளாதார வாழ்வில் ஏதாவது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை.

நவம்பரில் வருகிறது, டிசம்பரில் வருகிறதென கூட்டமைப்பு தலைவர்கள் கூறிய தீர்வு திட்டம் வர முன்னர் அரசே கவிழ்ந்துவிட்டது. ஓடி வந்த வீரன் கயிற்றை தொட முன்னர் கால் தடுக்கி விழுந்த கதையாகியிருக்கிறது. இது இலங்கை தமிழர் அரசியல் விவகாரத்தில் ஒன்றும் புதியதல்ல. சம்பவம் ஒன்று வடிவங்கள் வேறு என்ற விரக்தி சமுதாயத்தில் நிலவுகிறது.

போர்க்குற்ற விசாரணை பற்றி பேசிய மனித உரிமைகள் கழகம் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என்று கூறியிருக்கிறது. அவர்களும் வருடாவருடம் வரும் திருவிழா போல ஒரு நாடகத்தையே நடத்துகிறார்கள் என்பதை மக்கள் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்திருக்கிறார்கள்.

புலிகளை பயங்கரவாத பட்டியலில் சேர்த்த சர்வதேச சமுதாயம் அவர்கள் போரை நிறுத்தி, இத்தனை ஆண்டுகளாக இன்று வரை ஒரு வெடிச்சத்தம் கூட கேட்கவில்லை என்று தெரிந்தும், ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்கின்றன.

புலிகள் இருந்த காலத்தில் நாடு கிடைக்கவில்லை ஆனால் மற்றைய விடயங்கள் பல சிறப்பாக இருந்தன. இப்போது அதுவும் போய்விட்டது என்று வருத்தமடைவதாக பலர் கூறுகிறார்கள்.

இவ்வாறான பின்னணியில் மாவீரர்களை போரில் தோற்கடித்ததாக மார்தட்டும் சர்வதேச சமுதாயம் அழிவில் இருந்து மக்களை மீட்கும் பணியையும், அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலும் சரியாக செயற்பட்டதா என்றால் அவர்களும் தோல்வியை தழுவியிருக்கிறார்கள் என்ற கடும் விமர்சனமும் உண்டு.

மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆரம்பித்த அமெரிக்கா இப்போது அதை கைவிட்டு வர்த்தகப் போருக்குள் போய்விட்டதால் சர்வதேச காட்சிகள் மாறிவிட்டன. இதனால் தமது பிரச்சனையே பெரிய பிரச்சனை என்று கருதும் மற்றைய நாடுகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏறத்தாழ அனைத்தையும் மறந்துவிட்டன.

இவை புலிகள் விட்ட தவறல்ல.. புலிகளை எதிர்த்த உலகம் போருக்கு பின் விட்ட தவறு என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். ஆனால் இதுதான் உலகம் என்பதும் சதாரண மக்களின் அறிவுக்கு வந்துள்ளது.

ஆனால் போருக்கு பின் நடந்துள்ள அத்தனை தப்புத்தாளங்களுமே மாவீரர்களின் புகழை நாளுக்கு நாள் உயர்த்தவே உதவியிருக்கின்றன என்கிறார்கள் பல தமிழ் அறிவு ஜீவிகள்.

இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, மாவீரர் தினத்தின் தேவை இந்த நிமிடம் வரை மங்கிவிடவில்லை என்பதையே காட்டி நிற்கின்றன. இதற்கு மாறாக போரில் மரணித்த பல தளபதிகளின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டாலும் அவர்களுக்கான அஞ்சலிகள் வெளிப்படையாகப் பேசப்படவில்லை என்றும்…

புலிகளின் தலைவர் வருவாரா ? இல்லை வரமாட்டாரா ? என்ற கேள்விக்கு சரியான, ஒன்றிணைந்த தீர்க்கமான பதில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை ஒரு வாய்ப்பாக கருதி உலக நாடுகள் தட்டிக்கழித்துவிடும் என்றும் கருத்துக்கள் இருக்கின்றன.

இப்படி பல நியாயங்கள் கூறப்பட்டாலும் தமது இன்னுயிர் கொடுத்து போராடிய மாவீரர்களின் பெருமை தொடர்ந்து முன்னேறிச் செல்வதை மட்டும் மறுக்க முடியவில்லை.

மாவீரரின் தேவையும் அவர்கள் நினைவை கொண்டாடுவதற்கான தார்மீக நியாயங்களும் நாளுக்கு நாள் கூர்மை பெற்றே செல்லக் காண்கிறோம் என்கிறார்கள் புலம் பெயர் நோக்கர்கள்.

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது..
இங்கே மலரும் சின்னப்பூக்கள் வாடாது..

அலைகள் 27.11.2018

Related posts