ஷங்கருடன் போட்டி போடும் ராஜமவுலி

பாகுபலி படத்தை இயக்கியவர் ராஜமவுலி. அடுத்து ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை பல நூறுகோடி செலவில் இயக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதற்கான தொடக்கவிழா நடந்த நிலையில் தற்போது பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. பாகுபலி படத்திற்காக ராஜமவுலி அமைத்த அரங்குகள் பிரபலமாக பேசப்பட்டன. அதன்பாதிப்பை அடுத்தடுத்து வெளிவந்த வேறுசில படங்களில் காண முடிந்தது. இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர் 2.0 படத்தை 3டி வடிவில் உருவாக்கியிருப்பதுடன் ஒலி அமைப்பில் 4டி எனப்படும் புதிய சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

தியேட்டர்களில் வழக்கமாக திரைக்கு பின்னால், பக்கவாட்டு சுவர்களில் ஸ்பீக்கர்கள் அமைக்கப்படுகிறது. 4டி அமைப்பை பொறுத்தவரை கூடுதலாக தலைக்கு மேலும், ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் இருக்கைக்கு அடியிலும் ஸ்பீக்கர்கள் அமைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை 2.0 படத்துக்காக ஷங்கர் பயன்படுத்துகிறார்.

இதையறிந்த ராஜமவுலி தான் இயக்கும் புதிய படத்தில் அதைவிட துல்லியமான 4டி சவுண்ட் சிஸ்டத்துடன் தனது படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து உயர்தொழில்நுட்ப கருவிகளை வரவழைத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க 120 கேமராக்களை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளார். இதைக்கண்ட திரையுலகினர் சபாஷ் சரியான போட்டி என ரசிக்க தொடங்கியிருக்கின்றனர்.

Related posts