மீடூ மிகப்பெரிய மாற்றம் கரீனா கபூர் கருத்து

மீடூ இயக்கம் உயிர்ப்புடன் இருக்க, தொடர்ந்து அதைப்பற்றிப் பேசவேண்டும் என நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.

வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவுகளை சந்தித்த பெண்கள் வெளிப்படையாகத் தாங்கள் சந்தித்த துன்பங்களைப் பற்றிப் பேசும் மீடூ இயக்கம், கடந்த வருடம் ஹாலிவுட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கடந்த சில மாதங்களுக்கு முன், பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர், 2008-ம் ஆண்டு தன்னிடம் படப்பிடிப்பில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ஆனால், தொடர்ந்து பல பின்னணிகளைச் சேர்ந்த பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்துப் பேச ஆரம்பித்தனர். பாலிவுட்டில், சுபாஷ் கை, அலோக் நாத், விகாஸ் பால், கைலாஷ் கெர், சேட்டன் பகத், சஜீத் கான் மற்றும் வருண் க்ரோவர் உள்ளிட்ட எண்ணற்றவர்கள் இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

மீடூ இயக்கம் குறித்து நடிகை கரீனா கபூரிடம் சமீபத்தில் கேட்டபோது, “பல பெண்கள் முன்வந்து பேச ஆரம்பித்திருப்பது ஒரு தொடக்கம். பல வருடங்களாகப் பேசாதவர்கள் இன்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள். தைரியமாக இதைச் சொல்ல முன்வந்த பெண்களை நான் பாராட்டுகிறேன். வேலை செய்யும் இடத்தில் இருக்கும் அணுகுமுறையை மாற்ற கண்டிப்பாக இது உதவும். பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பைக் கொடுக்கும்.

பெரிய சூப்பர் ஸ்டாரோ, சிறிய நடிகரோ… யாரும் இதில் விதிவிலக்கல்ல. பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த இயக்கம் இதோடு நின்றுவிடக் கூடாது. தொடர்ந்து இதைப்பற்றிப் பேசி உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தாலே பல விஷயங்கள் மாறும்.

கடந்த சில மாதங்களில் (பாலிவுட்டில்) பல விஷயங்கள் ஆராயப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியான நடவடிக்கைகளும் ஒருபக்கம் முடுக்கி விடப்பட்டுள்ளன என நினைக்கிறேன். பல வருடங்களாகத் திரை மறைவில் இருந்து கொண்டு இதுபற்றிப் பேச முடியாமல் கஷ்டப்பட்ட காலம் போய், இப்போது வெளிப்படையாக உரையாடிக் கொண்டிருக்கிறோம். இது மிகப்பெரிய மாற்றம்” என்று கூறினார்.

Related posts