‘சர்கார்’ 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக தீபாவளியன்று வெளியான ‘சர்கார்’ திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. சர்வதேச அளவில், வெளியான 6 நாட்களில் இந்த வசூலை ‘சர்கார்’ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை, ‘எந்திரன்’, ‘ஐ’, ‘பாகுபலி 1’, ‘கபாலி’, ‘மெர்சல்’, ‘பாகுபலி 2’, ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 200 கோடி ரூபாய் வசூலை எட்டும் எட்டாவது திரைப்படம் ‘சர்கார்’.

ரஜினிகாந்த், பிரபாஸ், தற்போது விஜய் என இந்த மூன்று நடிகர்களின் தலா 2 படங்கள் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளன.

217.13 கோடி ரூபாய் வசூலுடன், 2018-ம் வருடம் அதிகம் வசூல் செய்துள்ள தென்னிந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் ‘சர்கார்’ பிடித்துள்ளது. ராம் சரண் நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ வசூலித்த 215.7 கோடி ரூபாய் என்ற இலக்கை ‘சர்கார்’ தாண்டிவிட்டது.

தேசிய அளவிலான வசூலில் ‘பத்மாவத்’, ‘சஞ்சு’, ‘ரேஸ் 3’, ‘பாகி 2’, ‘ஹிச்கி’, ‘தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 7-வது இடத்தைப் பிடித்துள்ளது ‘சர்கார்’.

தமிழ்நாடு வசூல்

தமிழகத்தில் மட்டும் ‘சர்கார்’ எட்டு நாட்களில் 108 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. ‘பாகுபலி 2’, ‘மெர்சல்’ படங்களுக்கு அடுத்து தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களில் ‘சர்கார்’ மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் கூடுதலாக இன்னும் 40 கோடி ரூபாய் வசூலைக் கூடுதலாகப் பெற்றால் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபகரமான படமாக ‘சர்கார்’ இருக்கும்.

சென்னையிலும் சாதனை

சென்னையைப் பொறுத்தவரை, ‘சர்கார்’ எட்டு நாட்களில் 11.61 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ‘பாகுபலி 1’, ‘மெர்சல்’, ‘கபாலி’ படங்களின் வரிசையில் அதிகம் வசூலித்த நான்காவது படமாக ‘சர்கார்’ உள்ளது.

Related posts