துரோக அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்

இந்த நாட்டின் வரலாறு அரசியல் துரோகங்களாலும் ஏமாற்று மோசடிகளாலுமே சீரழிந்து வந்திருக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு அப்பால் அரசியல் துரோகத்தனங்களே மேலோங்கி நிற்கின்றன.

அரசியல்வாதிகள் வேறொரு நோக்கத்திற்காக மக்களின் ஆணையைப் பெற்று பின்னர் மக்களின் விருப்பின்றி தமது சுயநலத்திற்காக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

இதனாலேயே நாட்டின் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தொடக்கம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாத கையறு நிலையில் மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள்.

கொள்கை, உறுதி, சமூகப் பொறுப்பு, தேசப் பற்று எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு தனதும் தனது சகபாடிகளினதும் நலனை மட்டும் முன்னிறுத்தும் அரசில் துரோகிகள் இருக்கும் வரை இந்த நாட்டின் இனப்பிரச்சினையோ அல்லது அதனோடு இணைந்த தீர்வு காணப்படாதுள்ள வேறெந்தப் பிரச்சினைகளுக்குமோ ஒருபோதும் தீர்வு காணப்படப்போவதில்லை.

மனிதாபிமான சிந்தனையுள்ள நேர்மையான அடாவடித்தனங்களற்ற அபிவிருத்தியை நோக்கி மக்களை வழிநடாத்தக் கூடிய அரசியல் விற்பன்னர்களையும் அதிகாரிகளையுமே மக்கள் எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.

எனவே, இத்தகையவர்களை இளைஞர் சமுதாயத்திலிருந்து வளர்த்தெடுக்க வேண்டும். அதேவேளை விலைபோகும் சந்தர்ப்பவாத துரோக அரசியல்வாதிகளை மக்கள் காறி உமிந்ழ்து நிராகரிக்க வேண்டும். நல்ல விடயங்களை எங்கு அமுலாக்கத் துவங்குவது என்பதிலேயே நிச்சயமற்ற தன்மை உள்ளது.

ஏனெனில், எங்குமே ஊழலும் நேர்மையீனமும், இனவாதமும் வளர்க்கப்பட்டுள்ளன. நாட்டின் இத்தகைய போக்கை எதிர்காலத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். நாட்டில் சட்டவாட்சி என்பது இனவாத பொருள்வாத அடிப்படையில் பாரபட்சமாய் உள்ளதாலேயே முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.

ஒரு நாடு என்று இருக்கின்ற போதும் இன, மத, பிரதேச, அரசியல் அடிப்படையில் பாரபட்ச நீதி என்ற நகர்வில் நாடு சென்று கொண்டிருப்பதால் மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள்.

மூத்த அரசியல்வாதிகள் இளையோருக்கு வழிவிட்டு சந்தர்ப்ப சுயலாப துரோகத்தன அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.

மக்கள் ஆணையை வேறொன்றுக்குப் பெற்று கடைசியில் தனது பச்சோந்தி சுயநலத்துக்காக விலைபோய் விடும் அரசியல்வாதிகள் எவராக இருந்தாலும் அவரை அந்த சமூகம் அடுத்து வரும் அரசியல்; அதிகாரத்திற்குத் தெரிவு செய்யாமல் நிராகரிக்க வேண்டும்.” என்றார்.

Related posts