44 பேருடன் காணாமல் போன நீர் மூழ்கி கப்பல் கடலின் அடியில்

கடந்த 2017 நவம்பர் 15ம் திகதி 44 கடற்படையினருடன் காணாமல் போன ஆர்ஜண்டீனா நாட்டுக்கு சொந்தமான ஆரா சென் யுவான் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலின் அடியில் சுமார் 800 மீட்டர் ஆழத்தில் கிடப்பதாக அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலொன்று கண்டு பிடித்து அறிவித்துள்ளது.

சுமார் 65 மீட்டர்கள் நீளமான இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜன்டீனாவின் மார் டெல் பிளாற்றா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு ஆச்சர்யமான முறையில் மறைந்தபோது அதற்குள் 44 பேர்களுடைய உயிர்களும் சேர்ந்து காணாமல் போயிருந்தன.

உள்ளே இருந்தவர்களின் பிராணவாயு குடுவைகள் ஏழு தினங்களுக்கு மட்டுமே உயிர் பிழைக்க போதுமானவையாக இருந்ததால் கன வேகத்தில் தேடுதல்கள் முடுக்கிவிடப்பட்டன.

காணாமல் போன கப்பலில் இருந்து சமிக்ஞைகள் தொடர்ந்து வந்தாலும் ஆர்ஜன்டீனாவால் கப்பல் கிடக்கும் இலக்கை கண்டறிய முடியவில்லை.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் ஆர்ஜன்டீனா அரசுக்கு பலத்த நெருக்கடிகள் கொடுத்து, அதனால் பல அரசியல் கொந்தளிப்புக்கள் ஏற்பட்டு நாளாவட்டத்தில் விவகாரம் அடங்கியும் போய்விட்டது.

இந்த நிலையில் திடீரென கப்பல் கடலின் அடியில் கிடப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால் ஆர்ஜண்டீனாவில் பரபரப்பு. இக்கப்பலானது புறப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 430 கி.மீ தொலைவில் வெல்டாஸ் குடா பகுதியில் உள்ள பற்றகோனியன் என்ற இடத்தில் 800 மீட்டர் ஆழத்தில் கிடக்கிறது.

இனி கப்பலை மீட்கும் பணிகளை ஆரம்பிக்க வேண்டிய புதிய சூழல் உருவாகியிருக்கிறது. விபத்தின் காரணம் வெளியானால் மீண்டும் ஆர்ஜன்டீனா அரசின் கவனக்குறைவு ஒரு தடவை சுற்று அலைபோல எழும் என்பது தெரிந்ததே.

இதற்குள் இன்னொரு விபத்து ஆபிரிக்கா கண்டத்தின் தென்புலத்தே அமைந்திருக்கும் ஸிம்பாப்பே நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

ஸிம்பாப்பே தலைநகர் கராராவில் இருந்து 500 கி.மீ தொலைவில் பேருந்து வண்டியொன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 42 பேர் பரிதாப மரணமடைந்துள்ளனர். பேருந்து வண்டி முற்றாகவே எரிந்து சாம்பலாகியிருக்கிறது.

இதுபோல அமெரிக்காவின் கலிபோர்ணியாவின் காட்டுத் தீ விபத்து தொடர்பாக வந்து கொண்டிருக்கும் செய்தியின் பிரகாரம் இதுவரை 74 பேர் இறந்ததாகக் கூறப்பட்டாலும் தீக்குள் மறைந்து போனோர் எண்ணிக்கை 1000 வரை தேறும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தில் 10.000 வீடுகள் தீக்கிரையாகின, 50.000 பேர் வாழிடங்களை இழந்துள்ளனர்.

1918ம் ஆண்டு அமெரிக்காவின் மினிசோற்றா பகுதியில் உண்டான காட்டுத்தீயில் 450 பேர் மடிந்த செய்தியின் பின் மோசமான காட்டுத்தீ இதுவாகும்.

மேலும் ஒரு செய்தியின்படி அமெரிக்க கரையோர காவற் பிரிவினர் 18.5 தொன் எடையுள்ள கொக்கேயின் போதை வஸ்த்தை கைப்பற்றியுள்ளனர்.

மெக்சிக்கோவுக்கும் மத்திய அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட கடற் பிராந்தியத்தில் 15 கடத்தல் படகுகளில் கொண்டுவரப்பட்ட போதை வஸ்தே அகப்பட்டது. இவற்றின் பெறுமதி 3.25 பில்லியன் டாலர்களாகும். 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலைகள் 18.11.2018

Related posts