சிங்கப்பூரிலிருந்து கிளிகளைக் கொண்டு வந்தவர் கைது

சிங்கப்பூரிலிருந்து கிளிகளை கொண்டுவந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) இரவு 9.10 மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து வந்த UL 309 எனும் விமானத்தில் வந்த குறித்த சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து, 10 லவ் பேர்ட்ஸ் மற்றும் 17 கிளிகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த கிளிகளின் பெறுமதி ரூபா 6 இலட்சத்து 50 ஆயிரம் (ரூபா 650,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 34 வயதான கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வனசீவராசிகள் மற்றும் பறவைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பறவைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் குறித்த சந்தேகநபர் உரிய அனுமதிப்பத்திரத்தை கொண்டிராமை காரணமாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசாரணைகளின் பின்னர், குறித்த பறவைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு ரூபா ஒரு இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலங்கு தனிமைப்படுத்தல் நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் குறித்த பறவைகளை மீண்டும் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யுமாறும் சுங்கத் திணைக்களம் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts