5 சவுதி அதிகாரிகளுக்கு மரண தண்டனை

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சவுதியின் அரசு வழக்கறிஞர் வியாழக்கிழமை கூறும்போது, ”இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்தில் மயக்க மருந்து செலுத்தி உடல் துண்டாக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜமால் கொலை வழக்கில் சவுதி அதிகாரிகள் 5 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்” என்றார்.

மேலும், அரசு வழக்கறிஞரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ”ஜமால் கொலை வழக்கு தொடர்பாக சவுதி தரப்பில் முதல் முறையாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. கண்டறிப்பட்ட ஜமாலின் உடல் பாகங்கள் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜமால் கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. சவுதி அதிகாரிகளுக்கு அவர் எந்த உத்தரவும் வழங்கவில்லை. மேலும், இந்த வழக்கிலிருந்து இளவரசர் முகமது பின் சல்மான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, சவுதியின் பிரபல பத்திரிகையாளரான ஜமால் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யவிருந்த நிலையில் கடந்த மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற அவர் மாயமானார்.

இதனைத் தொடர்ந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் ஜமால் கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரையும் துருக்கி வெளியிட்டது.

ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது. இதில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய துருக்கி, ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் புகார்களை அடுக்கியது.

ஜமால் கொல்லபட்டதைத் தொடர்ந்து மறுத்து வந்த சவுதி, துருக்கி வெளியிட்ட தொடர் ஆதாரங்களால் அவர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், சவூதி அரேபிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ள தகவலில், சவூதி அரேபிய தூதரகத்தில் கசோக்கிக்கு மதுபானம் கொடுக்கப்பட்டு பின்னர் அவரது உடல் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். அதன்பின்பு கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரகத்திற்கு வெளியே இருந்த ஒரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன என கூறப்பட்டு உள்ளது.

இதனால் கசோக்கி தூதரகத்திற்குள் கொலை செய்யப்பட்ட முறையானது முதன்முறையாக சவூதி அரசால் ஒத்து கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் கைதான சவுதியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts