புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார் ஜோதிகா

நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிகா ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

‘36 வயதினிலே’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு மகளிர் மட்டும், பாலா இயக்கிய நாச்சியார், மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களிலும் நடித்தார்.

ராதாமோகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம் இப்போது திரைக்கு வருகிறது. அடுத்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.ராஜ் டைரக்டு செய்கிறார். பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர்.

ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் நேற்று தொடங்கியது. நடிகர்கள் சிவகுமார், சூர்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த படத்துக்காக சென்னை பின்னி மில்லில் ரூ.50 லட்சம் செலவில் பள்ளிக்கூடம் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. படத்தின் கதையையும் ஜோதிகா கதாபாத்திரத்தையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. பள்ளிக்கூட அரங்கில் படப்பிடிப்பு நடப்பதால் மாணவர்கள் கல்வி சம்பந்தமான கதையாக இருக்கலாம் என்றும், ஜோதிகாவுக்கு ஆசிரியை வேடமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

Related posts