கார் முன் தள்ளி கொலை போஸீல் டிஎஸ்பி தற்கொலை

திருவனந்தபுரத்தில் வாகனத்தைச் சாலையில் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரே வாகனத்தின் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நெட்டியங்காரா போலீஸ் டிஎஸ்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவனந்தபுரம் நெட்டியங்காரா சரக போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் பி. ஹரிகுமார். கடந்த 5-ம் தேதி நெட்டியங்காரா பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ் சனல் என்பவர் தன் காருக்கு பின்பு தன் வாகனத்தை நிறுத்தியது சர்ச்சையானது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது சனலை டிஎஸ்பி தள்ளிவிட்டார். இதில் தூக்கிவீசப்பட்ட சனல் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதனால் சனலின் மனைவி விஜி, அவரின் குடும்பத்தினர் டிஎஸ்பி ஹரிகுமாரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். ஹரிகுமாரை கைது செய்யாதவரை உண்ணாவிரதத்தைக் கைவிடமாட்டோம் என்று அறிவித்தனர்.

இதையடுத்து, சனலை காரில் தள்ளிவிட்டு கொலை செய்த டிஎஸ்பி மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர்.

ஆனால், டிஎஸ்பி ஹரிகுமார் நெட்டியங்காராவில் உள்ள தனதுவீட்டைப்பூட்டிவிட்டு தமிழகத்துக்குத் தப்பியதாக தகவல் வெளியானது. மேலும், முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஹரிகுமார் சார்பில் முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையும் அடுத்த சில நாட்களில் வர இருந்தது. இந்நிலையில், போலீஸ் ஐஜி சிறீஜித் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹரிகுமாரை தேடும் முயற்சியில் போலீஸார் இறங்கினார்கள்.

இந்நிலையில், நெட்டியங்காரா நகரில் உள்ள கலம்பலம் பகுதியில் உள்ள தனது வீட்டில் போலீஸ் டிஎஸ்பி ஹரிகுமார் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஹரிகுமார் வீட்டுக்குச் சென்ற போலீஸார், ஹரிகுமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் அறிந்தவரை போலீஸ் டிஎஸ்பி ஹரிகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார். விசாரணை நடந்து வரும்நிலையில் மேற்கொண்டு ஏதும் கூறமுடியாது எனத் தெரிவித்தனர்.

Related posts