அரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு அமையவே, ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

நேற்றைய தினம் (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணை இன்று (13) உச்சநீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் நலின் பெரேரா, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட மா அதிபர் இவ்வாறு விளக்கமளித்தார்.

அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் இரண்டாவது பிரிவிற்கு அமைய, பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு சரியானது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் குறித்த அதிகாரத்தை, அரசியலமைப்பின் வேறு எந்தவொரு பிரிவும் அதனை கட்டுப்படுத்தவில்லை என்பதால், ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர் பாராளுமன்றத்தை கலைத்து உள்ளார் என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

எனவே அது அரசியலமைப்புக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts