டென்மார்க் வானவில் கல்வி நிலையம் வரலாற்று பெரும் சாதனை

டென்மார்க்கில் இயங்கி வரும் வானவில் கல்வி நிறுவனத்தின் 18 வது ஆண்டு நிறைவு விழாவும், ஆங்கிலக்கல்வியில் சித்தியடைந்தோருக்கான பரிசளிப்பு விழாவும் நேற்று கோசன்ஸ் நகரில் உள்ள தியேட்டர் ரோவுட் என்ற அரங்கில் பி.ப.1.30 மணிக்கு ஆரம்பித்தது.

இந்த நிகழ்வில் நாம் கண்ட ஆச்சரியமான விடயங்கள் பல.. அவற்றில் சில..

01. ஆங்கிலக் கல்வியில் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தால் ஐரோப்பா கண்டம், மற்றும் வடக்கு ஆபிரிக்க பிராந்தியத்தில் சிறந்த ஆங்கிலக்கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. இதற்கான சான்றிதழை அரங்கில் காண்பித்தார்கள்.

02. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள எட்டு நாடுகள் உலக ஆங்கில கல்வியில் முதல் எட்டு இடங்களிலும் தேர்வாகியிருக்கின்றன. அந்த போட்டி சூழலில் வானவில் கல்வி நிறுவனம் இப்படியொரு வெற்றி பெற்றிருக்கிறது யாதொரு ஆர்பாட்டமும் இல்லாமல்.

03. கார்த்திக் மனோகரன் என்ற இளைஞர் தனது வாழ்வை தியாகமாக்கி இலங்கையில் எட்டித்தொட முடியாத ஓர் இலக்கை ஐரோப்பிய மண்ணில் நின்று செய்து காட்டி, இலங்கை தலைவர்கள் மூக்கில் விரலை வைக்குமளவுக்கு சாதனை படைத்துள்ளார்.

இந்தச் சாதனைக்கு மாணவர்கள், பெற்றோர், டென்மார்க் என்ற நாடு ஆகிய மூன்றும் முக்கிய காரணமாகும் என்று கார்த்திக் மனோகரன் நன்றி கூறினார். அத்தகைய சாதனை மனிதனுக்கு உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலை வழங்கி பாராட்டினார் ஆசிரியர் கி.செ.துரை.

04. இந்த ஆண்டு வானவில் கல்வி நிறுவன மாணவர்கள் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக தேர்வில் அபார சித்தியடைந்திருக்கிறார்கள். 170 புள்ளிகள் கொண்ட பரீட்சையில் 169 புள்ளிகளை பெறுமளவுக்கு சாதனை படைத்துள்ளார்கள். அனைத்து மாணவர்களும் சித்தியடைந்தது பெருமை தந்தது.

05. ஆங்கிலக் கல்வியை மட்டுமல்ல குறும் திரைப்படங்களாக ஆங்கிலம் பேசும் படங்களை தாரிக்கும் போட்டி ஒன்றும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறுகின்றன. இம்முறை குறும்பட தயாரிப்பு சர்வதேச தரத்தில் அமைந்திருந்தது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

06. ஆங்கிலக்கல்வியில் உடல் மொழி மிக முக்கியமாகும். நவரச பாவங்களையும் காட்டும் நடனங்களை, நடிப்புக்களை ஆசிரியை ஆதித்யா கார்த்திக் நெறிப்படுத்தி வருகிறார். சிறந்த நடனங்கள் நாடகங்கள் எல்லாம் அவையை அழகுபடுத்தின.

07. விழா மதியம் 1.30 ற்கு ஆரம்பிக்கும் என்று போடப்பட்டிருந்தது. பெற்றோர் அரங்கு நிறைய சரியான நேரத்திற்கே நின்றது ஆச்சரியம் தந்தது. அரங்கின் பல்கனி கூட நிறைந்து கிடந்தது. சரியாக தொடங்கி சரியாக நிறைவடைந்தது.

08. தோன்றில் புகழொடு தோன்றுக என்று வள்ளுவர் கூறுவார். வருடம் தோறும் மாணவர்களின் வெற்றி என்ற புகழோடு ஆண்டு விழாவில் தோன்றுகிறது வானவில் கல்வி நிறுவனம்.

09. இலங்கையில் ஹாட்லிக் கல்லூரிக்கும், சென் ஜேன்ஸ் கல்லூரிக்கும் உலகளாவிய புகழை தேடிக் கொடுத்தவர் அன்றைய அதிபர் பூரணம்பிள்ளை. அதுபோல கோப்பாய் ஆசிரியர் கலாசாலையை யாழ். பல்கலைக்கழகத்தைவிட மதிப்புள்ள கலாசாலையாக வைத்திருந்தவர் அதன் முன்னாள் அதிபர் ஆனந்தக்குமாரசாமி. இவர்கள் இருவருடைய காலமும் அந்த பாடசாலைகளின் பொற்காலமாகும். அதுபோல வானவில் கல்வி நிறுவனமும் அதன் அதிபரான கார்த்திக் மனோகரனின் காலத்தில் சிகரத்தை தொட்டு நிற்கிறது என்று தலைமைதாங்கிய ஆசிரியர் கி.செ.துரை பாராட்டுரை வழங்கினார்.

நல்லோர் ஒருவர் உளரெனில் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யுமாம் மாமழை.. குறள்

Related posts