ஜனாதிபதி செய்திருப்பது தவறு ஜனநாயக விரோதம் : மாவை ஏமாற்றம்

தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய தருணம் வர ஜனாதிபதி நழுவி ஓடியது மாவைக்கு வலியை உண்டு பண்ணியுள்ளது.

நிச்சயமாக அவரால் முடியாது என்பதை முன்னரே கண்டு பிடிக்க முடியாது இப்போது மாவையார் பாடிய கோவையார்.. இவ்வாறுள்ளது.

ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் சாவகச்சேரியில் அமைந்துள்ள ரவிராஜின் நினைவுத் தூபியில் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு ரவிராஜிற்கு அங்சலி செலுத்திய பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் பல கட்சிகள் இணைந்து மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாகத் கொண்டு வந்திருந்தனர். அதன் பின்னர் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு தேசிய அரசாங்கமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சி மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் உட்பட கூட்டமைப்பும் இணைந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் இருந்தது.

இவ்வாறானதொரு நிலைமையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதில் பல குறைபாடுகள் இருந்தாலும் இடைக்கால அறிக்கையொன்று வெளியிடப்பட்டு அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நேரத்தில் அரசியலைப்பு அதிகாரத்தை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனைக் குழப்புகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றார்.

குறிப்பாக பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை மாற்றி மஹிந்த ராஐபக்ஷவை பிரதமராகக் கொண்டு வந்திருந்தார். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிக்கு இல்லாத போதிலும் அரசியலமைப்பை மீறியே இந்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டுடிருக்கின்றார். இதனால் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் அரசியலமைப்பிற்கு முரண்பட்ட வகையில் ஜனநாயக விரோதச் செயலை மேற்கொண்டு பாராளுமன்றத்தையும் கலைத்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகளாது நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கும் எதிரானவை. ஆகவே ஜனாதிபதியின் இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts