இனிமேல் நீங்களே நாட்டின் முதல்வர், நீங்களே பிரதமர் ஆசிரியர் கி.செ.துரை

நேற்று டென்மார்க் கோசன்ஸ் நகரில் நடைபெற்ற வானவில் கல்வி நிறுவனத்தின் 18வது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்று பேசியபோது ஆசிரியர். கி.செ.துரை கூறிய கருத்தின் விரிவாக்கம்..

தமிழ் மக்களின் பிரச்சனையை ஓர் அரசியல் தலைவர் தலைமை தாங்கி தீர்ப்பார் என்று தமிழ் மக்கள் இனியும் மனப்பால் குடித்தல் கூடாது.

ஒரு கதாநாயகன் வந்து தீர்ப்பதல்ல இந்தப் பிரச்சனை.. இது புறவியல் சிக்கல் அல்ல அகவியல் சிக்கல்.

நீங்கள் நன்கு கூர்ந்து பார்த்தால் இலங்கையின் இனப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனை ஆகிய மூன்றும் தீர்க்க முடியாத பிரச்சனைகள் அல்ல.

உலகத்தின் பல நாடுகள் அதைத் தீர்த்து செல்வந்த நாடுகளாக இருக்கின்றன.. நாம் மட்டும் ஏழ்மையில் கிடக்க என்ன காரணம்..?

ஒரு பிரச்சனை வந்தால் அதை தலைவர்களுக்கு தீர்க்கத் தெரியாமையும், அதற்கான பரந்த ஞானமும், அதை வெல்ல யூனிக் ஆன ஒரு சிந்தனையும் இல்லாமையுமே பிரச்சனை.

இலங்கை பிரச்சனை என்பது ஒரு பிரச்சனையே அல்ல.. அது தீர்க்கத்தெரியாதவர்களால் உருவான பிரச்சனையாகும் என்பதற்கு கடந்த எழுபது வருடங்கள் போதும்.

நமக்குள்ள உண்மையான பிரச்சனை ஒரு பிரச்சனையை தீர்த்து அறுவடையை வெளிக்கொண்டுவர தெரியாமையே.

அவர் சரி இல்லை இவர் பிழை என்ற நியாயங்கள் இங்கு முக்கியமில்லை. எழுபது வருடங்கள் தோட்டத்தை கொத்தி நீர் பாய்ச்சி அறுவடை இல்லை என்றால் அது பெரிய தவறு.

கடந்த எழுபது வருடங்களாக அறுவடை இல்லாத விவசாயம்தான் இங்கே நடக்கிறது. இதை வெற்றி கொள்ள என்ன வழி..?

பழைய வழிகளை முற்றாக துறந்து யூனிக்கான புது வழி காண வேண்டும்.

அது ஒவ்வொரு பிரஜையும் இனி தானே வடக்கு கிழக்கின் முதல்வர் என்று தன்னைத்தானே மனதளவில் பிரகடனம் செய்து களமிறங்க வேண்டும்.

ஒவ்வொரு பிரஜையும் நானே ஜனாதிபதி, பிரதமர் என்று தன்னை மாற்றிக் கொண்டு தேசத்தின் புதல்வர்களாக தியாக உணர்வுடன் செயற்பட வேண்டும்.

அனைத்து பிரச்சனைகளையும் இன்னொருவர் வென்று தருவார் என்று நினைத்தது மக்களாகிய நாம் இழைத்த தவறுதான்.

இனி நமக்கு தலைவர்களோ, கட்சிகளோ விடிவு தருவார்கள் என்று நம்புவதை இக்கணமே நாம் கைவிட வேண்டும். நாமே பிரச்சனையை தீர்க்கும் தலைவர்களாக மாற வேண்டும்.

மக்கள் மனதில் ஒரு புது வெள்ளம் பாய வேண்டும்..

நான் மக்களை பயங்கரவாதிகள் ஆகச் சொல்லவில்லை.. மக்களை மக்களாக ஆகுங்கள் என்கிறேன்.. உங்கள் பிறவியை தோல்வியடைய விடாதீர்கள் என்கிறேன்.

நீங்கள் மரணிக்கும் போது மற்றவனை நம்பிய ஏமாளிகளாக மரணிக்க வேண்டாம் என்றுதான் கேட்கிறேன்.

ஒவ்வொரு குடிமகனும் நான் அந்த நாட்டின் முதல்வராக இருந்தால் என்ன செய்வேன் என்று நினைத்து கண் முன் உள்ள மாபெரும் சமுதாய பொறுப்பை கையில் எடுக்க வேண்டும்.

ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒவ்வொரு வெற்றிகளும் துன்பங்கள் என்ற போர்வையை போர்த்தியபடியே வருகின்றன.

இந்தத் துயரங்களை பேசி இனியும் கண்ணீர் வடிக்க வேண்டாம்.. ஒரே சுவரில் எழுபது வருடங்களாக மண்டையை மோதியது போதும்.. இதுவரை பிளந்தது நமது மண்டைகள்தான்.

பிரச்சனையை தீர்ப்பது எவனுமல்ல நானேதான்.. அதற்காகவே நான் பிறந்திருக்கிறேன் என்றுதான் நான் எண்ணுகிறேன்.

அது போல நீங்களும் எண்ணுங்கள்.. 24 மணி நேரத்தில் எதிரில் இருக்கும் மலை தவிடு பொடியாகும்.

இது உங்கள் காலம்.. உறவுகளே மற்றவனால் முடியாது ! மதங்களால் முடியாது..! கடவுளால் முடியாது..! கட்சிகளால் முடியாது..! உன்னால் மட்டுமே முடியும்…!

நீயே மேய்ப்பன்..! நீயே கடவுள்..! களமிறங்கு..! புத்தெழுச்சி பெறு..!

ஒவ்வொரு குடிமகனும் இனி மேய்ப்பர்களின் பின்னால் போகும் மந்தைகளாக இருக்காது, இக்கணம் முதல் நாமும் தலைவர்களே என்று தன்னம்பிக்கை பெறுங்கள்.. இலங்கைப் பிரச்சனை நமக்கு ஒரு சுண்டங்காய்.. இந்த உலகத்தின் பிரச்சனையே தீர்க்கப்பிறந்தவன் நானே என்று நான் சொல்கிறேன்.

அதையே நீயும் சொல்..!

இத்தனை இலட்சம் பேரில் எடுத்த காரியத்தை செயல் வடிவமாக முடித்துக் காட்டும் ஒருவனை வாக்களிப்பால் தேட முடியவில்லை என்றால் அதன் மூலம் இயற்கை சொல்ல வரும் செய்தி என்ன..?

இங்கு எவனுக்கும் அந்தத் தகுதி இல்லை உனக்குத்தான் இருக்கிறதென அந்த இயற்கை சொல்கிறது என்று எழு..!

அனைத்துத் தடைகளையும் அள்ளி வீசி கொழுத்திவிட்டு, அந்த ஒளியில் உன்னை அடையாளம் காண்;..!

பைத்தியங்களுடன் சேர்ந்து பைத்தியக்காரனாக வாழ்ந்தது போதும் உறவே விடுதலை பெறு..!

எல்லோரும் தோல்வியென்றால் வெற்றியாளன் யார்..?

சந்தேகமே இல்லை அது நீதான்..!

அலைகள் 11.11.2018

Related posts