அலைகள் வாராந்தப் பழமொழிகள் 11.11.2018 ஞாயிறு

01. ஒரு தலைவனுக்கு எது அவசியம்…? அவனுக்கு எப்போதுமே எதிர்காலத்தை கணிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நாம் ஏமாற்றப்படுவோம் என்பது தெரியாதவனை தலைவனாக ஏற்று அழிந்து போகாதே.!

02. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதுபற்றி கவலைப்படாதே.. எந்த கஷ்டமான காலத்தையும் எமக்கு சாதகமாக மாற்றிவிடலாம். அதற்கு ஓர் அறிவு வேண்டும். ஒவ்வொரு கஷ்டமும் நன்மைக்கான ஆசீர்வாதங்களாகவே வருவதை மறந்துவிட வேண்டாம்.

03. வெற்றி பெற்றவர்கள் அதிர்ஷ்டக்காரர் என்று நினைக்க வேண்டாம். உண்மையில் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்று எதுவுமே கிடையாது. வெற்றி பெற்ற அனைவரும் கடுமையாக போராடியிருக்கிறார்கள்.

04. இறைவன் இந்த உலகத்தை நல்ல நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். ஆகவே தீயவரையும், தீயவைகளையும் நிராகரிக்க தயங்க வேண்டாம்.

05. கிழட்டு வேடம் போடாதீர்கள். ஒவ்வொரு மனிதனும் 120 ஆண்டுகள் வாழக்கூடியவாறுதான் அவன் உடலும் அதன் உறுப்புக்களும் படைக்கப்பட்டிருக்கிறது.

06. ஆன்மாவை செம்மைப்படுத்துவதென்பது ஒவ்வொரு நாளும் கற்பதுதான். சாக்கிரட்டீஸ் நஞ்சூட்டி கொல்லப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக சிறைச்சாலைக்கு வெளியில் யாரோ ஒருவன் வாசித்த வயலின் இசையை கேட்டு மகிழ்ந்தார். கடைசி ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல் கற்றார். அதன் மூலம் ஆன்மாவை செம்மைப்படுத்தினார். இன்று அந்த ஒரு நிமிடத்தையே உலகம் பேசுகிறது.

07. இன்று நீங்கள் ஏதாவது வெற்றியடைந்திருந்தால் அது தனியே உங்களுடையதல்ல. ஆசிரியர், பெற்றோர், சமுதாயம் என்று பலதரப்பட்டவரதும் கூட்டு முயற்சியே.. ஆகவே நன்றி கூறுங்கள். நன்றி கூறுவது நம்மை பிரித்துவிடுமென நினைத்துவிடாதீர்கள். நினைத்தவர்கள் வேரோடு அழிய நேரிடும். வாழ்க்கையின் இரகசியம் என்ற நூலில் இந்த வாக்கியம் இருக்கிறது.

08. வாழ்க்கை என்பது பிரச்சனையை தீர்க்கும் பயிற்சிப் புத்தகம் போன்றது. எனவே அதை கூர்ந்து அவதானியுங்கள். அதில் உங்களை தொலைத்துவிடாது கற்றுக் கொள்ளுங்கள்.

09. மூங்கிலில் ஒவ்வொரு பத்து செ.மீ அளவிலும் கணுக்கள் உள்ளன. அந்த மூங்கிலானது ஒவ்வொரு பத்து செ.மீ வளர்ச்சிக்கு பின்னரும் ஒரு புதிய பிரச்சனையை சந்திக்கிறது. அதனால்தான் அது உயரமாக வளர்க்கிறது. அது போலத்தான் இந்த வாழ்க்கையும் சோதனைகள் என்ற கணுக்களால்தான் மேல் உயர்கிறது.

10. நல்ல நேரம் கெட்ட நேரம் என்று எதுவும் கிடையாது. ஆதாரம் கேட்கிறீர்களா..? உங்கள் உடல் கெட்ட நேரத்தில் வளராமலும், நல்ல நேரத்தில் மட்டும் வளர்வது கிடையாது. ஆகவே வளர்ச்சிதான் முக்கியம் கிரகம், ஜோதிடம் என்று வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம்.

11. பில்கேட்சையும், அமெரிக்காவையும் ஏழரை சனியும், அட்டமத்து சனியும் ஒரு காலமும் பிடித்ததில்லை. அவர்கள் எள்ளுப் பொட்டளி எரித்ததும் இல்லை. பரம ஏழைகளான நம்மூர் கந்தையாவையும், பொன்னம்மாவையும் மட்டும் அது பிடிப்பது ஏன்..? சனி பகவானுக்கு இந்த கோமாளிகளைப் பிடிக்க வேண்டிய தேவை என்ன..? மனதில் கேட்டுப் பாருங்கள்.

12. குறுகிய கால ஓட்டப்பந்தயத்தில் பிள்ளைகள் வெற்றி பெற்றுவிட வேண்டும். அதன் பின் தாம் கட்டையில் போய்விடும் காலம் வந்துவிடுமென பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். பாடசாலை கல்வி என்பது நூறு மீட்டர் ஓட்டம் போல மிக சிறியது. அதற்கு வெளியால் மரதன் ஓட்டம் என்றும் ஒன்று இருக்கிறது. அது ஆயுட்காலம் வரை ஓட வேண்டிய ஓட்டமாகும்.

13. திறமைகள் திராட்சை வைனைப் போன்றவை அவை நாட் செல்ல செல்லத்தான் பெறுமதி கூடிச்செல்லும்.

14. எப்போதுமே வெற்றியை அனுபவிக்காத மக்கள் வெற்றி கிடைத்தால் பயந்துவிடுவார்கள். அதுபோலவே பாமர மக்கள் தோல்விக்குள் இருப்பதே தமக்கு பாதுகாப்பு என்று கருதி தோல்வி ராகம் பாடியபடி மற்றவருக்கு என்று மற்றவனுக்கு மீளா அடிமைகளாகவே இருக்கிறார்கள்.

15. இந்த இலக்கல்ல மேலும் ஓர் இலக்கு இருக்கிறதென நீங்கள் நினைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

16. வெற்றி பெற்ற எவருமே சூப்பர்மேன்கள் அல்ல அவர்கள் வெற்றியின்மேல் நம்பிக்கை வைத்த காரணத்தினாலேயே அதைத் தொட்டார்கள்.

17. பயன்படுத்தத் தெரியாதவர்களிடம் இருக்கும்போது மூளை என்பது மிகவும் சிறிய விடயம்.. அதுவே பயன்படுத்தத் தெரிந்தவர்களிடம் அது இருக்கும்போது பெரிய விடயம்

18. பயன்படுத்தத் தெரியாத பல கோடி மக்களிடமும் மூளையை கொடுத்த இறைவன் அவர்களை தொடர்ந்தும் மன்னிக்கக் கற்றுக்கொண்டதாலேயே இறைவன் ஆனான். இல்லையேல் பூமியில் உள்ள 99 வீதமான மனிதர்களை அவன் என்றோ கொன்று தள்ளியிருப்பான்.

19. என்னிடம் எதுவும் இல்லை.. ஆனால் இல்லை என்று சொல்லப்படும் எதுவும் எனது வெற்றிக்கு தடையல்ல என்று கூறியதால் கென்றி போர்ட் மகத்தான வெற்றி பெற்றார்.

20 மேலும் மேலும் புதிய சிறைச்சாலைகளை கட்டுவோம் என்று நினைக்கும் தலைவர்கள் முட்டாள்கள். சிறைச்சாலைகள் இல்லாத நாட்டை உருவாக்க திட்டமில்லாத எவனும் தலைவனாக இருக்க தகுதியற்றவன்.

21. திறமை என்று எதுவும் கிடையாது. உண்மையில் அது ஒரு மனோநிலைதான்.

22. சிறந்த விளைச்சலை போட வேண்டுமா சிறந்த உரத்தைப் போடு.

23. செயலில் இறங்காது சிந்தித்துக் கொண்டே இருந்தால் தோல்வி வீடு வந்து தட்டும். பயப்பட வேண்டாம் செயலில் இறங்குங்கள். மற்றவர் கூறும்வரை காத்திருக்க வேண்டாம்.

24. ஓர் இலக்கு நிர்ணயிக்கப்படும்வரை எதுவும் நடப்பதில்லை. எந்த ஊர் போகிறோம் என்று தெரியாதவர்களுக்கு பேருந்து டிக்கட்டை வழங்க முடியாது. எத்தனையோ இளைஞர்களுக்கு எதிர்கால இலக்கு இல்லை. அதுதான் இப்படி சீரழிகிறார்கள்.

25. சாதிக்கப் போகும் இலக்கை எண்ணுங்கள்.. போகப்போகும் ஊரை எண்ணுங்கள்.. நீங்கள் நிற்கும் இடத்திற்கு வர அதே நேரம் ஒரு வாகனமும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து புறப்பட்டிருக்கும். ஆகவே நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றினால் உடன் செயற்படுத்த களம் இறங்குங்கள்.

அலைகள் பழமொழிகள் 11.11.2018

தொடர்ந்தும் வரும்..

Related posts