‘2.0’ குறித்து மனம் திறந்த ரஜினி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘2.0’. ஏமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற (நவம்பர்) 29-ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு ரஜினி அளித்த பேட்டியில் இருந்து ‘2.0’ படம் தொடர்பான விஷயங்களை மட்டும் இங்கு தொகுத்துத் தந்துள்ளோம்…

எந்திரனில் இருந்த எந்தெந்த விஷயங்கள் எல்லாம் ‘2.0’வில் இருக்கின்றன?

கதாபாத்திரங்கள் மட்டும்தான். சிட்டி, வசீகரன் ஆகிய கதாபாத்திரங்கள் தவிர, மற்றபடி எந்திரனுக்கும் ‘2.0’வுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே கிடையாது. ‘2.0’ களமே வேறு. இதில் ஒரு நல்ல மெசேஜை ஷங்கர் கூறியுள்ளார்.

‘2.0’ இசை பற்றி?

முதலில் இந்தப் படத்துக்குப் பாடல்களே வேண்டாம் என்றுதான் ஷங்கர் ப்ளான் செய்தார். பிறகு ஒரு டைட்டில் பாடல் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்பிறகு, ஒரு பின்னணிப் பாடல் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. படம் மிகவும் சீரியசாகச் செல்லும்போது, அந்த இடத்தில் ஒரு பிரேக் தேவைப்பட்டதால் ஒரு டூயட் என்று மொத்தமாக 4 பாடல்கள் அமைந்து விட்டன. படத்தின் விஷுவலுக்கு ஏற்றவாறு பின்னணி இசை அமைப்பது ரஹ்மானுக்குச் சவாலாக இருந்தது. முதல் படம் போல பரபரப்பாக இருந்தார் ரஹ்மான்.

ரோபோவாக நடிப்பது எந்த வகையில் சவாலானது?

இதற்கு முழு காரணமும் ஷங்கர் மட்டும்தான். ரோபோ சம்பந்தப்பட்ட அனைத்துப் படங்களையும் எனக்குப் போட்டுக் காட்டினார். அவரும் நடித்துக் காட்டினார். ஷங்கர் நடிப்பதைப் பார்த்தால், நானெல்லாம் ஒன்றுமே கிடையாது. அவர் ஒரு ப்ரில்லியன்ட் ஆக்டர். அவர் ஹீரோ ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார். எங்களுடைய நல்ல நேரம், அவர் ஹீரோ ஆகவில்லை. இல்லையென்றால், அவரே டைரக்‌ஷன் செய்து, அவரே நடிக்கவும் செய்து தூள் கிளப்பியிருப்பார்.

‘எந்திரன்’ படத்தில் இருந்த மேஜிக்கல் மொமென்ட்ஸ் ‘2.0’ படத்திலும் உண்டா?

நிறைய உண்டு. இதுவரை நான் நடித்த படங்களில், எனக்குப் பிடித்த திரைக்கதை ‘பாட்ஷா’ தான். அதை ஷங்கரிடமே சொல்லியிருக்கிறேன். அதன்பிறகு எனக்குப் பிடித்த திரைக்கதை ‘2.0’.

அக்‌ஷய் குமார் பற்றி?

அவருடைய கடின உழைப்பும் நிதானமும் பிரமிக்க வைக்கிறது. நானாக இருந்தால், ‘அட போங்கப்பா…’ என்று சொல்லியிருப்பேன். அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் கம்மிதான்.

‘சிவாஜி’யில் நீங்கள் பார்த்த ஷங்கருக்கும், ‘2.0’ ஷங்கருக்கும் என்ன வித்தியாசம்?

‘2.0’ படத்தில் ஷங்கர் ஒரு ஹாலிவுட் டைரக்டராகவே மாறி விட்டார். ஒரு டெக்னீஷியனாகவும், ஒரு மனிதனாகவும் நிறைய மாற்றங்கள். முன்பு நிறைய கோபப்படுவார். இப்போது நிறைய பக்குவம் தெரிகிறது அவரிடம்.

‘2.0’ ஷங்கர் படமா? ரஜினி படமா?

இது சுபாஷ்கரன் படம். உண்மையில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டைக் கொடுத்துவிட்டு இத்தனை நாட்கள் காத்திருந்ததே பெரிய விஷயம். யாரும் அவ்வளவு பொறுமை காத்திருக்க மாட்டார்கள்.

‘2.0’ குழந்தைகள் மத்தியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்?

நான் லக்னோ, வாரணாசி எல்லாம் சென்றிருந்தேன். அப்போது நான் தங்கியிருந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தைகளை அழைத்துவந்து, ‘இவர்கள் உங்கள் ரசிகர்கள்’ என்று கூறினார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்களுக்கு சிட்டியைத் தெரிகிறது. ஷங்கருக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

‘2.0’ டீமில் யாரையாவது பாராட்ட வேண்டும் என்றால், யாரைப் பாராட்டுவீர்கள்?

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. கடினமான ஷாட்களை எல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்தார். அதன்பிறகு, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ். சாபு சிரில் சிஷ்யர். ஆனால், அவரையே மிஞ்சிவிட்டார் என்று சொல்லலாம்.

‘2.0’ படத்தில் மிகவும் கஷ்டப்பட்ட அல்லது ஒரு கண்டம் மாதிரி கடந்து வந்த தருணம்?

டெல்லியில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது எனக்கு உடல்நிலை சரியில்லை. அதன்பிறகு நான் அமெரிக்கா செல்லவேண்டும். நான் சம்பந்தப்பட்டக் காட்சிகளை 7 நாட்கள் ஷூட் பண்ண வேண்டும். ஜவஹர்லால் ஸ்டேடியத்தில் அனுமதி கிடைப்பது கடினம். இல்லையென்றால் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

டாக்டர், ‘முடியவே முடியாது. மீறினால் எங்களால் உத்தரவாதம் தர முடியாது’ என்று சொல்லிவிட்டார். ஆனால், ஷூட்டிங் சென்றே ஆகவேண்டிய சூழல். இல்லையென்றால், அனைத்தும் தாமதமாகி விடும். அதன் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு நடித்து முடித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஷங்கருடைய உழைப்பைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்?

‘2.0’ படம் ஆரம்பித்த பிறகு நான் ‘கபாலி’, ‘காலா’, ‘பேட்ட’ ஆகிய 3 படங்களிலும் நடித்து முடித்து விட்டேன். ஆனால், அவர் இந்தப் படத்துக்காக 4 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்திருக்கிறார். அவருக்கு 10 படங்களுக்கான சம்பளத்தைக் கொடுக்க வேண்டும்.

Related posts